திருப்பூரில் கோடிக்கணக்கான பணம் மோசடி: சுற்றுலா நிறுவன உரிமையாளரின் சகோதரி கைது


திருப்பூரில் கோடிக்கணக்கான பணம் மோசடி: சுற்றுலா நிறுவன உரிமையாளரின் சகோதரி கைது
x
தினத்தந்தி 20 Jun 2019 4:16 AM IST (Updated: 20 Jun 2019 4:16 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் கோடிக்கணக்கான பணம் மோசடி செய்த வழக்கில் சுற்றுலா நிறுவன உரிமையாளரின் சகோதரியை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்,

கோடிக்கணக்கான பணம் மோசடி செய்த வழக்கில் சுற்றுலா நிறுவன உரிமையாளரின் சகோதரியை கைது செய்தது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் அவினாசி ரோடு புஷ்பா தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே டிராவல் கிராப்ட் என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்லும் டிராவல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வந்தது.

இந்த நிறுவனத்தின் சார்பில் மலேசியா, சிங்கப்பூர் செல்வதற்காக பயண கட்டணம் செலுத்திய 100-க்கும் மேற்பட்டவர்களை வெளிநாடு அழைத்துச்செல்லாமல் நிறுவனத்தை பூட்டி விட்டு அதன் உரிமையாளர்கள் தலைமறைவானார்கள். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அதன் உரிமையாளரான மணிகண்டன், அவருடைய சகோதரி மாலதி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கோடிக்கணக்கான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதில் மணிகண்டனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து அவரிடம் விசாரணை நடத்தி பின்னர் மீண்டும் சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் மணிகண்டனின் தங்கையான கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மாலதியை(39) மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் மாலதியை நீதிமன்ற காவலுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Next Story