ஊட்டி நகராட்சி குப்பை கிடங்கில் தீ - சுகாதார சீர்கேடு
ஊட்டி நகராட்சி குப்பை கிடங்கில் தீ வைக்கப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
ஊட்டி,
ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சுற்றுலா தலமாக இருப்பதால், ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். இதனால் ஊட்டி முழுவதும் தினமும் 35 டன்னுக்கு மேல் குப்பைகள் சேகரமாகிறது. இதில் மார்க்கெட்டில் மட்டும் 9 டன் குப்பைகள் அகற்றப்படுகிறது.
குடியிருப்புகள் மற்றும் தங்கும் விடுதிகளில் சேகரமாகும் குப்பைகளை அந்தந்த வார்டுகளுக்கு நகராட்சி வாகனங்களில் துப்புரவு பணியாளர்கள் சென்று சேகரித்து வருகிறார்கள். அப்போது மக்கும் அல்லது மக்காத குப்பை என குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்காததால், அதனை தரம் பிரிக்க துப்புரவு பணியாளர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
ஊட்டியில் சேகரிக்கப்படும் குப்பைகள் தீட்டுக்கல் பகுதியில் உள்ள கிடங்கில் கொட்டப்படுகிறது. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இந்த குப்பை கிடங்கில் கெட்டுப்போன உணவுகள், பழங்கள், இறைச்சி கழிவுகள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட குப்பைகள் மொத்தமாக குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு குப்பைகளை தரம் பிரிக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக குப்பைகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அங்கு துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை தரம் பிரிப்பதற்காக தனித்தளம் அமைக்கப்பட்டு, மேற்கூரை போடப்பட்டு உள்ளது. இது பயன்படுத்தப்படாமல் அப்படியே விடப்பட்டு இருக்கிறது. மேலும் 2 புதிய நவீன எந்திரங்கள் வாங்கி வைக்கப்பட்டு உள்ளன. இதனை கடந்த பல மாதங்களாக உபயோகப்படுத்தாததால், அவை துருப்பிடித்த நிலையில் காணப்படுகிறது. நாளுக்குநாள் குப்பைகள் கொட்டுவது அதிகரித்துக்கொண்டே சென்றாலும், அவை தரம் பிரிக்கப்படாததால் மலை போல குவிந்து கொண்டே செல்கிறது.
இதற்கிடையில் நகராட்சியை சேர்ந்த சிலர் கிடங்கில் உள்ள குப்பைகளுக்கு பகல் நேரங்களில் தீ வைத்து விடுகின்றனர்.
இந்த தீயில் பிளாஸ்டிக் பொருட்கள் கருகி, அப்பகுதியில் எங்கு பார்த்தாலும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக நகராட்சி வாகனங்களில் குப்பை கொட்ட அங்கு செல்லும் துப்புரவு பணியாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.
எனவே தீட்டுக்கல் கிடங்கில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக கூடுதலான துப்புரவு பணியாளர்களை கொண்டு தரம் பிரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story