நாகர்கோவிலில் பஸ் மோதி டீக்கடை தொழிலாளி சாவு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு


நாகர்கோவிலில் பஸ் மோதி டீக்கடை தொழிலாளி சாவு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 Jun 2019 11:00 PM GMT (Updated: 20 Jun 2019 9:02 PM GMT)

நாகர்கோவிலில் அரசு பஸ் மோதி டீக்கடை ஊழியர் பரிதாபமாக இறந்தார். சாலை சரியில்லாத காரணத்தால் தான் விபத்து ஏற்பட்டதாக கூறி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில்,

பூதப்பாண்டி அருகே உள்ள இறச்சகுளத்தை சேர்ந்தவர் நாராயணபிள்ளை (வயது 50), நாகர்கோவிலில் உள்ள ஒரு டீக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று காலை வழக்கம் போல வேலைக்கு சென்றார். பின்னர் சாப்பிடுவதற்காக மீண்டும் வீட்டுக்கு சைக்கிளில் புறப்பட்டார். புத்தேரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தரை பாலத்தை கடந்து சென்ற போது பின்னால் ஒரு அரசு பஸ் வந்தது. உடனே நாராயணபிள்ளை பஸ்சுக்கு வழிவிடுவதற்காக சாலை ஓரத்தில் ஒதுங்கினார். ஆனால் பாலம் வேலை முடிந்த நிலையிலும், சாலையின் ஓரத்தில் நிறைய கற்கள் கிடந்தன.

இதன் காரணமாக சைக்கிளுடன் சாலை ஓரம் ஒதுங்கிய நாராயணபிள்ளை நிலை தடுமாறினார். அப்போது எதிர்பாராத விதமாக சைக்கிள் மீது பஸ் மோதியது. இந்த விபத்தில் நாராயணபிள்ளை சாலையில் விழுந்தார். அவர் மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த நாராயணபிள்ளை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

பால வேலைகள் முடிந்த பிறகும் சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்யாமல் அலட்சியமாக இருந்ததால் தான் விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினார்கள். மேலும் விபத்து காரணமாக நாராயணபிள்ளை பரிதாபமாக இறந்த சம்பவம் மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே சாலையை சீரமைக்காததற்கு கண்டனம் தெரிவித்தும், உடனே சாலையை சீரமைக்க வலியுறுத்தியும் பொதுமக்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுவரையிலும் நாராயணபிள்ளையின் உடலை எடுக்க கூடாது என்றும் கூறினார்கள். இதனால் உடல் சாலை ஓரம் வைக்கப்பட்டு துணியால் மூடப்பட்டு இருந்தது. மக்களுக்கு ஆதரவாக இந்து அமைப்பை சேர்ந்தவர்களும் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது.

மேலும் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. நாகர்கோவிலுக்கு வரும் அரசு பஸ்கள், நாகர்கோவிலில் இருந்து இறச்சகுளம் மார்க்கமாக செல்லும் அரசு மற்றும் மினி பஸ்கள், லாரிகள், கார்கள் என அனைத்து வாகனங்களும் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. இதனால் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தகவல் அறிந்த வடசேரி மற்றும் பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மக்களின் கோரிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எனவே மறியலை கைவிட்டு விட்டு கலைந்து செல்லும்படியும் போலீசார் கூறினர். ஆனால் போலீசாரின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

மக்கள் தங்களது கோரிக்கையில் உறுதியாக இருந்ததால் மறியல் போராட்டம் நீடித்தது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை உருவானது.

நிலைமை மோசமாவதை அறிந்த அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். கோரிக்கையை உடனே நிறைவேற்றுவதாக அவர் மக்களிடம் உறுதி கூறினார். இதில் சமாதானம் அடைந்த போராட்டக்காரர்கள், சுமார் 2 மணி நேரம் நடந்த மறியலை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர். அதன் பிறகு வாகனங்கள் மெல்ல மெல்ல செல்ல தொடங்கின. பின்னர் போக்குவரத்து சீரானது.

இதற்கிடையே நாராயணபிள்ளையின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story