தலைவாசல் அருகே தம்பதியை கட்டிப்போட்டு ரூ.1 லட்சம், 15 பவுன் நகை கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு


தலைவாசல் அருகே தம்பதியை கட்டிப்போட்டு ரூ.1 லட்சம், 15 பவுன் நகை கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 21 Jun 2019 10:15 PM GMT (Updated: 21 Jun 2019 8:09 PM GMT)

தலைவாசல் அருகே தம்பதியை கட்டிப்போட்டு ரூ.1 லட்சம் மற்றும் 15 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


தலைவாசல், 

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள மணிவிழுந்தான் காலனியை சேர்ந்தவர் குமார்(வயது 73), விவசாயி. இவருடைய மனைவி அம்மணி(65). இவர்களுடைய மகன் மோகன்ராஜ். இவர் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று இரவு அம்மணி, வீட்டில் உள்ள குளியலறையில் குளித்து கொண்டிருந்தார். அப்போது அவருடைய வீட்டுக்குள் 3 மர்ம ஆசாமிகள் புகுந்தனர். இதையடுத்து அவர்கள் அம்மணியை தாக்கி அவருடைய கை, கால்களை துணியால் கட்டி குளியலறைக்குள் அடைத்தனர்.

மேலும் அவர்கள், வீட்டில் இருந்த குமாரின் கை, கால்களையும் கட்டி ஒரு அறையில் தள்ளிவிட்டனர். இதையடுத்து மர்ம ஆசாமிகள் 3 பேரும் வீட்டில் இருந்த ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் மற்றும் 15 பவுன் நகை ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர். பின்னர் இவர்களுடைய சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து தலைவாசல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜூ, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரவேல் பாண்டியன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் சம்பவம் நடந்த வீட்டுக்கு கைரேகை நிபுணர்கள் வந்து கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் தம்பதியை கட்டிப்போட்டு பணம், நகை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story