நெல்லிக்குப்பம் அருகே பரபரப்பு, குப்பை கிடங்கில் திடீர் தீ - துப்புரவு ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்


நெல்லிக்குப்பம் அருகே பரபரப்பு, குப்பை கிடங்கில் திடீர் தீ - துப்புரவு ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 22 Jun 2019 4:00 AM IST (Updated: 22 Jun 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பம் அருகே குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது துப்புரவு ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புகளில் இருந்து தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி துப்புரவு ஊழியர்கள் வாகனம் மூலம் எடுத்துச் சென்று கீழ்பட்டாம்பாக்கம் திருக்குளம் குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர். ஆனால் கீழ்பாதி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த கிடங்கில், இதுவரை குப்பை கொட்ட அந்த பகுதி மக்கள் அனுமதிக்கவில்லை. இதனால் துப்புரவு ஊழியர்கள் நகராட்சியில் சேகரிக்கும் அனைத்து குப்பைகளையும் திருக்குளம் குப்பை கிடங்கில் கொட்டுவதுடன், இரவு நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத போது குப்பைகளை தீ வைத்து கொளுத்துகின்றனர்.

இந்த நிலையில் நேற்று திருக்குளம் குப்பை கிடங்கில் மலைபோல் குவிந்து கிடந்த குப்பைகள் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. அப்போது தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்ததால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளை புகை மண்டலம் சூழ்ந்தது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பொதுமக்கள் வீடுகளில் இருக்க முடியாமல் அவதியடைந்தனர். பின்னர் குப்பை கிடங்கில் எரிந்த தீயை அணைக்க பொதுமக்கள் முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதுபற்றி தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதற்கிடையே நகராட்சி துப்புரவு ஊழியர்கள் அங்கு வந்து குப்பை கிடங்கை பார்வையிட்டனர். அப்போது பொதுமக்கள், துப்புரவு ஊழியர்களை முற்றுகையிட்டு அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் திருக்குளம் குப்பை கிடங்கிலும் இனிமேல் குப்பைகளை கொட்டக்கூடாது, மீறி கொட்டினால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். அப்போது அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள், பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நெல்லிக்குப்பம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story