வெள்ளகோவில் பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு எண்ணெய் பேரல்கள் ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்


வெள்ளகோவில் பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு எண்ணெய் பேரல்கள் ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 21 Jun 2019 10:45 PM GMT (Updated: 21 Jun 2019 9:39 PM GMT)

வெள்ளகோவில் பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு எண்ணெய் பேரல்கள் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

வெள்ளகோவில்,

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே மேட்டுப்பாளையம் கிராமம் வேப்பம்பாளையத்தில் சிட்கோ தொழிற்பேட்டை உள்ளது. இங்கு 2 தொழிற்சாலைகள் மட்டுமே உள்ளன. ஒன்று கழிவு எண்ணெய் மறுசுழற்சி செய்யும் ஆலை, மற்றொன்று பழைய டயர்களை ரீ-பட்டன் போடும் ஆலை. இந்த 2 ஆலைகளாலும் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், நிலத்தடி நீர் மற்றும் விளை நிலம் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த தொழிற்சாலைகளை மூட வேண்டும் என்று வீரசோழபுரம், ராசாத்தாவலசு, வள்ளியரச்சல், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை சந்தித்து, இந்த தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்தி, அவற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். பொதுமக்களின் போராட்டம் காரணமாக அந்த தொழிற்சாலைகளின் இயக்கத்தையும் அதன் உரிமையாளர்கள் நிறுத்தி விட்டனர்.

இந்த நிலையில் வெள்ளகோவில் அருகே இயங்காமல் உள்ள கழிவு எண்ணெய் மறு சுழற்சி செய்யும் தொழிற் சாலைக்கு புதுச்சேரியில் இருந்து ஆயில் பேரல்களை ஏற்றி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. இது பற்றிய தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விரைந்து சென்று வள்ளியரச்சல்-வேப்பம்பாளையம் சாலை மகுடபதி தோட்டம் அருகே அந்த லாரியை தடுத்து நிறுத்தி, சிறைபிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து லாரியை ஓட்டி வந்த டிரைவர், தொழிற்சாலையின் உரிமையாளருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். இது பற்றிய தகவல் அறிந்ததும் வெள்ளகோவில் போலீசார் விரைந்து சென்று முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி லாரியை விடுவித்தனர்.

இதற்கிடையில் ஆயில் தொழிற்சாலையின் உரிமையாளர்களான கரூரை சேர்ந்த அருண்குமார் மற்றும் விஜயகுமார் ஆகிய இருவரும் காரில் அங்கு வந்தனர். அப்போது லாரியை தடுத்தவர்கள் யார்? என்று கூறியதோடு பொதுமக்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் எடையக்காட்டு வலசை சேர்ந்த வக்கீல் தெண்டபாணி (வயது 45) மற்றும் சரவணன் (40) ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஆயில் தொழிற்சாலை உரிமையாளர்கள் வந்த காரின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். இதற்கிடையில் ஆயில் தொழிற்சாலை உரிமையாளர்கள் தாக்கியதாக காயம் அடைந்த 2 பேரும் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம், காங்கேயம் தாசில்தார் விவேகானந்தன் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து ஆயில் பேரல் ஏற்றி வந்த லாரியை போலீஸ் நிலையத்திற்கு ஓட்டிச்சென்றனர்.

Next Story