முப்பந்தல் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் காற்றாலை ஊழியர் அலறியடித்து ஓட்டம்


முப்பந்தல் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் காற்றாலை ஊழியர் அலறியடித்து ஓட்டம்
x
தினத்தந்தி 22 Jun 2019 11:00 PM GMT (Updated: 22 Jun 2019 8:44 PM GMT)

ஆரல்வாய்மொழி அருகே முப்பந்தல் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை நேரில் பார்த்த காற்றாலை ஊழியர் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.

ஆரல்வாய்மொழி,

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கு மலையானது பரந்து விரிந்துள்ளது. இது மேற்கு தாடகை மலை முதல் பணகுடி மகேந்திரகிரிமலை வரை உள்ளது. இங்கு மரங்கள் மிக நெருக்கமாக வளர்ந்து உள்ளதால் இந்த பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

முப்பந்தல், மூவேந்தர் நகர் வடக்கு பகுதியில் மலை அடிவாரத்தில் வட்டப்பாறை உள்ளது. இந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான காற்றாலைகள் ஏராளமாக உள்ளது. நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள காற்றாலையில் மின் அளவை கணக்கிட ஊழியர் அய்யப்பன் இருசக்கர வாகனத்தில் சென்றார்.

ஒரு இடத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு செல்போன் பேசிக்கொண்டே அவர் திரும்பி பார்த்த போது, அங்கு ஒரு சிறுத்தை உட்கார்ந்து கொண்டு இவரையே பார்த்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அய்யப்பன் அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

இதே போல சில நாட்களுக்கு முன்பு காற்றாலை காவலாளிகளும் சிறுத்தையை பார்த்ததாக கூறப்படுகிறது.

சிறுத்தையை காற்றாலை ஊழியர் பார்த்த இடத்தின் அருகிலேயே மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் உள்ளது. சிறுத்தை நடமாட்டம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியை சேர்ந்த ராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்துக்கு வந்த சிறுத்தை 3 ஆடுகளை கடித்து கொன்று விட்டு தப்பி ஓடியது. பணகுடி பகுதியில் 3 ஆடுகளை கொன்ற சிறுத்தை தான் இந்த பகுதிக்கு வந்து உள்ளதோ என்றும் மக்கள் கருதுகிறார்கள். எனவே சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story