முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்ய முயன்ற ராணுவ அதிகாரி கைது


முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்ய முயன்ற ராணுவ அதிகாரி கைது
x
தினத்தந்தி 24 Jun 2019 4:45 AM IST (Updated: 23 Jun 2019 11:50 PM IST)
t-max-icont-min-icon

சுவாமிமலை முருகன் கோவிலில் முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்ய முயன்ற ராணுவ அதிகாரி மணக்கோலத்தில் கைது செய்யப்பட்டார்.

கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள மதனத்துர் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவருடைய மகன் சுபாஷ்சந்திரபோஸ்(வயது42). இவர் அலகாபாத்தில் ராணுவ அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த செல்லாராணி(41) என்பவருக்கும் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று 21 வயதில் ஒரு மகனும் 17 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்து வருகிறார். மகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். சுபாஷ்சந்திரபோசுக்கும் அவரது மனைவி செல்லாராணிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் மனவருத்தத்தில் இருந்தனர்.

இதனால் சுபாஷ்சந்திரபோஸ் தனது மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்ய முடிவு செய்தார். இதன்படி அவர் மதுரை மாவட்டம் மகாத்மாகாந்தி நகரை சோந்த ஒருவரை சந்தித்து தனக்கு திருமணமாகவில்லை என கூறி அவரது மகளை தனக்கு திருமணம் செய்து தருமாறு கேட்டார். இதை நம்பிய பெண்ணின் தந்தை தனது மகளை சுபாஷ்சந்திரபோசுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். நேற்று காலை கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலைமுருகன் கோவிலில் சுபாஷ்சந்திரபோசுக்கும் மதுரையை சேர்ந்த பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றது. மணக்கோலத்தில் சுபாஷ்சுந்திரபோஸ் திருமணத்துக்கு தயாராக இருந்தார்.

இந்தநிலையில் தனது கணவருக்கு 2-வது திருமணம் நடைபெற உள்ளதை அறிந்த சுபாஷ்சந்திரபோசின் முதல் மனைவி செல்லாராணி மகாராஷ்டிராவில் இருந்து புறப்பட்டு சுவாமிமலைக்கு வந்தார். பின்னர் அவர் சுவாமிமலை போலீஸ் நிலையத்துக்கு சென்று தனது கணவருக்கு 2-வது திருமணம் நடைபெற உள்ளதை கூறி திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் செல்லாராணியுடன் சுவாமிமலை முருகன் கோவிலுக்கு சென்றனர். அங்கு மணக்கோலத்தில் சுபாஷ்சந்திரபோஸ் திருமணத்துக்கு தயாராக இருந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சுபாஷ்சந்திரபோஸ் தனது மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்ய இருந்தது தெரியவந்தது. மேலும் அவர் தான் 2-வதாக திருமணம் செய்ய இருந்த மதுரையை சேர்ந்த பெண்ணிடம் தனக்கு ஏற்கனவே திருமணமாகி மகனும் மகளும் உள்ள தகவலை மறைத்ததும் தெரியவந்தது.

இதனால் அவரை திருமணம் செய்ய காத்திருந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். உடனே சுவாமிமலை போலீசார் ராணுவ அதிகாரி சுபாஷ்சந்திரபோசை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். மணக்கோலத்தில் இருந்த ராணுவ வீரரை போலீசார் பிடித்து சென்றதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்ய முயன்ற ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் சுவாமிமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story