ஆரல்வாய்மொழி சந்தையில் திடீர் சோதனை: ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைத்த 500 கிலோ மாம்பழங்கள் அழிப்பு


ஆரல்வாய்மொழி சந்தையில் திடீர் சோதனை: ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைத்த 500 கிலோ மாம்பழங்கள் அழிப்பு
x
தினத்தந்தி 23 Jun 2019 11:00 PM GMT (Updated: 23 Jun 2019 8:00 PM GMT)

ஆரல்வாய்மொழியில் உணவு பாதுகாப்பு அதிகாரி நடத்திய அதிரடி சோதனையில் ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைத்த 500 கிேலா மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி தாணுமாலையன்புதூர் பகுதியில் உள்ள சந்தையில் ரசாயன கற்களால் வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் மற்றும் கெட்டு போன பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதையடுத்து அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பிரவின் ரகு அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சந்தையில் உள்ள பழக்கடைகள், சாலையோர கடைகள் போன்றவற்றை ஆய்வு செய்தார். இதில் ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைத்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 500 கிலோ மாம்பழம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

மேலும், பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களில் காலாவதியான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. தொடர்ந்து, இறைச்சி கடைகளுக்கு சென்று உணவு பொருட்களின் பாதுகாப்பின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

இதுபோன்ற சோதனைகள் தொடரும் எனவும், சுகாதாரமற்ற முறையில் கெட்டுபோன உணவு பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி எச்சரித்தார். அதிகாரியின் இந்த திடீர் ஆய்வினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story