திருச்செங்கோடு அருகே முதுகலை கணினி ஆசிரியர் தேர்வு எழுத வந்தவர்கள் சாலை மறியல்


திருச்செங்கோடு அருகே முதுகலை கணினி ஆசிரியர் தேர்வு எழுத வந்தவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 23 Jun 2019 11:00 PM GMT (Updated: 23 Jun 2019 8:24 PM GMT)

திருச்செங்கோடு அருகே முதுகலை கணினி ஆசிரியர் பணிக்கு தேர்வு எழுத வந்தவர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எலச்சிபாளையம்,

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 814 முதுகலை கணினி ஆசிரியர் பணியிடங் களுக்கு 30 ஆயிரத்து 833 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். இவர்களுக்கு கணினி வாயிலாக நேற்று 119 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் இதற்காக திருச்செங்கோடு அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மையம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த மையத்தில் தேர்வு எழுத 2,270 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். இந்த தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி 770 பேர் தேர்வை எழுத தொடங்கினர்.

ஆனால் மீதமுள்ள 1,500 பேரால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வை எழுத முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த தேர்வர்கள் சிலர் திருச்செங்கோடு-ஈரோடு சாலையில் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உஷா, திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் ஆகியோர் அவர்களை சமரசம் செய்தனர். பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு எழுத ஏற்பாடு செய்வதாக கூறினர். இதையடுத்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டனர்.

இருப்பினும் பிற்பகலிலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்களால் தேர்வு எழுத முடியவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் திருப்பினர். இது குறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கணினி தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வில் பங்கு கொள்ளாதவர்களுக்கும், தேர்வினை முழுமையாக நிறைவு செய்யாதவர்களுக்கும் வேறு ஒருநாளில் தேர்வு நடத்தப்படும். எனவே தேர்வர்கள் எக்காரணத்தை கொண்டும் அச்சப்பட தேவையில்லை. தேர்வு நடைபெறும் நாள் மற்றும் மையங்கள் சார்ந்த விவரங்கள் தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் வாயிலாக ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story