உடுமலையில் ஆபத்தான நிலையில் தண்டவாளத்தை கடக்கும் பள்ளி மாணவர்கள் கட்டுப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


உடுமலையில் ஆபத்தான நிலையில் தண்டவாளத்தை கடக்கும் பள்ளி மாணவர்கள் கட்டுப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 24 Jun 2019 10:30 PM GMT (Updated: 24 Jun 2019 6:48 PM GMT)

உடுமலையில் ஆபத்தான நிலையில் தண்டவாளத்தை பள்ளி மாணவர்கள் கடந்து வருகிறார்கள். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போடிபட்டி,

சிறுவர்கள் ஒருவர் பின் ஒருவராக நின்று கொண்டு ஒருவரை ஒருவர் பிடித்துக்கொண்டு ஓடி விளையாடும் ரெயில் விளையாட்டு 1990–ம் ஆண்டுகளில் கிராமங்களில் பிரபலம். ஆனால் இன்றைய நிலையில் மாணவர்கள் ரெயில் தண்டவாளத்தில் நின்று கொண்டு ரெயிலோடு விளையாடும் ஆபத்தான நிலை உள்ளது. உடுமலை பகுதியில் நடைபெறும் இந்த ஆபத்தான விளையாட்டை தடுக்க பள்ளி நிர்வாகமும் பெற்றோர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:–

உடலுக்கும் மனதுக்கும் உற்சாகத்தையும் ஆரோக்கியத்தையும் தரக்கூடிய பெரும்பாலான விளையாட்டுகள் இன்று காணாமல் போய் விட்டது. பெரும்பாலான சிறுவர்களும் இளைஞர்களும் ஆண்ட்ராய்டு போன்களுக்கு அடிமையாகி அதன் கூடவே பேசி, அதனுடனேயே விளையாடி, அதனுடனேயே பொழுதை கழிக்கும் நிலை உள்ளது. இவ்வாறு விளையாடப்படும் பல வீடியோ கேம்கள் சிறுவர்களின் உயிருக்கு உலை வைப்பதாக உள்ளது எனக்கூறி தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உடுமலை பகுதியில் பள்ளி மாணவர்கள் ரெயிலோடு விளையாடும் ஆபத்தான விளையாட்டு உயிருக்கு உலை வைக்கும் அபாயம் உள்ளது. உடுமலை–தளி ரோட்டில் ரெயில் தண்டவாளத்துக்கு மேல் மேம்பாலம் உள்ளது. மேலும் இதே பகுதியில் ரெயில் தண்டவாளத்துக்கு கீழ் சுரங்கப்பாதையும் உள்ளது.

இந்த 2 பாதைகளையும் பெரும்பாலும் வாகன ஓட்டிகள் மட்டுமே பயன்படுத்துகின்றனர். இந்த பகுதியை சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகள் பெரும்பாலும் தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்தே செல்கின்றனர். அதுமட்டுமின்றி இந்த பகுதிக்கு அருகிலுள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகள் பெரும்பாலும் நடந்தபடியே தண்டவாளத்தை கடந்து பள்ளிக்கு சென்று வருகின்றனர். இதனை மாணவர்களின் பெற்றோரோ? பள்ளி நிர்வாகங்களோ கண்டித்ததாக தெரியவில்லை.

இந்த நிலையில் சமீப காலங்களில் மாணவர்கள் விளையாடும் ஆபத்தான விளையாட்டு நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது. தங்கள் வீடுகளிலிருந்து சீக்கிரமாகவே பள்ளிக்கு கிளம்பி வரும் மாணவர்கள் தண்டவாளத்தையே விளையாட்டு மைதானமாக்கி விளையாடுகின்றனர். ரெயில் வரும் போது தண்டவாளத்தில் கற்கள் மற்றும் சில்லறைக்காசுகளை வைத்து அவை நசுங்குவதை அருகில் நின்று வேடிக்கை பார்க்கும் மாணவர்களின் நடவடிக்கைகள் சமீப காலமாக ஆபத்தான அடுத்த கட்டத்துக்குப் போயிருக்கிறது.

தண்டவாளத்தில் கும்பலாக கைகளைக்கோர்த்து நிற்கும் மாணவர்கள் ரெயில் அருகில் வரும் வரை காத்திருந்து அருகில் வந்ததும் இருபுறமும் குதித்து ஓடுகின்றனர். இந்த பகுதியில் ரெயில் மிதமான வேகத்தில் கடப்பதால் இதுவரை விபத்துகள் எதுவும் நடைபெறவில்லை. அதே நேரத்தில் ரெயில் சற்று வேகமாக வந்தாலோ மாணவர்கள் தடுமாறி விழ நேர்ந்தாலோ விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே பள்ளி நேரத்தில் தண்டவாளப்பகுதியில் மாணவர்கள் விளையாடாமல் தடுக்க பள்ளி நிர்வாகங்களும் ரெயில்வே நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் பெற்றோரும், பிள்ளைகளை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். இளங்கன்று பயமறியாது என்பது போல உயிரோடு விளையாடும் மாணவர்களுக்கு ஆபத்தை புரிய வைக்காவிட்டால் விபரீதங்கள் நடைபெறக்கூடும்.

இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.


Next Story