குறை தீர்க்கும் கூட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி கிராம மக்கள் திரளாக வந்து மனு


குறை தீர்க்கும் கூட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி கிராம மக்கள் திரளாக வந்து மனு
x
தினத்தந்தி 25 Jun 2019 4:30 AM IST (Updated: 25 Jun 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் திரளாக வந்து மனு கொடுத்தனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் திருப்புல்லாணி யூனியன் நல்லிருக்கை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரளாக வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:–

எங்கள் கிராமத்தில் 550 வீடுகள் உள்ளன. எங்களுக்கு உப்புநீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படாததால் உள்ளுர் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வருவதில்லை. காவிரி குடிநீர் திட்ட குழாய் பழுது என்று காரணம் கூறி கடந்த 3 ஆண்டுகளாக தண்ணீர் சப்ளை செய்யவில்லை. இதனால் நாங்கள் உப்புதண்ணீரை குடித்து வருகிறோம்.

கண்மாய் பகுதியில் உள்ள கிணற்றில் ஊற்று குறைவாக உள்ளதால் பல மணி நேரம் காத்திருந்து தண்ணீர் பிடித்து பயன்படுத்துகிறோம். வசதியானவர்கள் தண்ணீர் கேன் வாங்கி குடிக்கின்றனர். கிராமத்தில் கிணறு தோண்டியவர்கள் அதிக ஆழத்தில்தான் தண்ணீர் கிடைக்கும் என்று தெரிந்து 7 அடி தோண்டியதோடு பணிகளை முடிக்காமல் சென்றுவிட்டனர். இதுபோன்ற காரணங்களினால் நாங்கள் குடிநீருக்காக திண்டாடி வருகின்றோம்.

மேலும், எங்கள் கிராமத்தில் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த 15 பேருக்கு மட்டுமே நூறுநாள் வேலை திட்டத்தில் வேலை வழங்குகின்றனர். நல்லிருக்கை கிராமத்தினருக்கு மாதம் ஒருநாள் மட்டுமே வேலை வழங்குகின்றனர். இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு குடிநீர் கிடைக்க வழி செய்யாவிட்டால் நாங்கள் ஊரை காலி செய்து இங்கு வந்து குடியேறுவதை தவிர வழியில்லை.

இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தனர்.

ராமநாதபுரம் அருகே உள்ள கோனேரியேந்தல் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் திரளாக வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:– ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த எங்களுக்கு அரசின் எந்த நலத்திட்டங்களும் கிடைப்பதில்லை. இப்பகுதியில் முதியவர் ஒருவர் நடந்து வரும்போது தண்ணீர் தாகம் எடுத்து தண்ணீர் கிடைக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பள்ளி மாணவ–மாணவிகள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். வெயில் அதிகம் உள்ளதால் பள்ளி குழந்தைகள் தண்ணீர் கிடைக்காமல் மயங்கிவிழும் நிலை உள்ளது.

எங்கள் கிராமத்திற்கு வர வேண்டிய தண்ணீரை வழிநெடுகிலும் குழாயை உடைத்து வயல் வெளிகளுக்கு திறந்துவிட்டுள்ளனர். இதனால் எங்களுக்கு கிடைக்க வேண்டிய குடிநீர் தடைபட்டுள்ளது. தொடர்ந்து மனு கொடுத்தும் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. இனியும் இந்த குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் வீரராகவ ராவ், உடனடியாக ஊராட்சிகள் உதவி இயக்குனர், குடிநீர் வாரிய அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுத்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.


Next Story