லால்குடி அருகே டாஸ்மாக் காவலாளியை கொன்ற 3 பேர் கைது பரபரப்பு வாக்குமூலம்


லால்குடி அருகே டாஸ்மாக் காவலாளியை கொன்ற 3 பேர் கைது பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 24 Jun 2019 11:15 PM GMT (Updated: 24 Jun 2019 7:41 PM GMT)

லால்குடி அருகே டாஸ்மாக் காவலாளியை கொன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

லால்குடி,

திருச்சி மாவட்டம் லால் குடியை அடுத்த பூவாளூரில், சிறுகனூர் சாலையில் ராஜா என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு பெருவளநல்லூர் வடக்கு புதுத்தெருவை சேர்ந்த பாலையா(வயது 55) என்பவரை தினக்கூலி அடிப்படையில் இங்குள்ள பணியாளர்கள் காவலாளியாக நியமித்து இருந்தனர்.

இவர் தினமும் இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரை அங்கு பணியில் இருப்பார். கடந்த 19-ந்தேதி இரவு 10 மணிக்கு டாஸ்மாக் கடை மூடப்பட்டதும், இரவு 12 மணி வரை கணக்கு பார்த்துவிட்டு டாஸ்மாக் பணியாளர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டனர். பாலையா வழக்கம்போல் இரவு காவல் பணியில் இருந்தார்.

இந்த நிலையில் டாஸ்மாக் கடைக்கு அருகே உள்ள வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச 20-ந்தேதி காலை சிலர் அந்த வழியாக சென்றனர். அப்போது, காவலாளி பாலையா தலை, கழுத்து மற்றும் கைகளில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுபற்றி டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் கண்ணனுக்கும், லால்குடி போலீஸ் நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த கொலையில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் லால்குடி முத்துக்குமார், சிறுகனூர் ராஜா ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் மணக்கால் ரெயில்வே கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது ஒரு மொபட்டில் வந்த லால்குடியை அடுத்த நடுஞ்கூர் தெற்குதெருவை சேர்ந்த அசோக்குமார் மகன் அர்ஜூன் (21), பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூரை அடுத்த அய்யனார்புரம் காலனி தெருவை சேர்ந்த செல்வம் மகன் சந்துரு (19), நெடுங்கூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த செல்வம் மகன் சவுந்தரராஜன் (20) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் டாஸ்மாக் கடை காவலாளியை கொன்று கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.

மேலும், அவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

நாங்கள் கடந்த 19-ந்தேதி பெருவளப்பூர் பகுதியில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தோம். இதன் சத்தம் கேட்டு அங்கு தூங்கி கொண்டிருந்த காவலாளி பாலையா எழுந்து தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் அவரை இரும்பு கம்பியால் தாக்கினோம். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனையடுத்து நாங்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டோம்.

அதுமட்டுமின்றி 3 பேரும் சேர்ந்து சிறு, சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தோம். கடந்த வாரம் கொப்பாவளி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை கொள்ளையடித்தோம். பின்னர் அந்த மது பாட்டில்களை லால்குடியை அடுத்த தச்சன்குறிச்சியில் உள்ள வனப்பகுதியில் மறைத்து வைத்து குடித்து வந்தோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர். இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து லால்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story