தண்ணீர் சேமிப்பில் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்; கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
தண்ணீர் சேமிப்பில் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி,
கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–
நமது வாழ்க்கைக்கு முக்கிய தேவையான தண்ணீரை சேமிக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. நமது பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு ஏரி, குளம், வாய்க்கால் ஆகியவற்றை பாதுகாப்பதில் சமூக பங்களிப்பு அவசியம். ஒவ்வொரு துளி தண்ணீரும் சேமித்து பாதுகாக்கப்பட வேண்டும். அப்படி செய்தால்தான் புதுவை நீர்வளம் மிக்கதாக இருக்கும்.
இதற்காக நம்மாலான முயற்சிகளை செய்யவேண்டும். மேலும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களின் பங்களிப்பினையும் பெற வேண்டும். இதற்கான பொதுமக்களின் பணம் அதற்காகவே செலவிடப்படவேண்டும். அவை தணிக்கை செய்யப்பட வேண்டும்.
கடந்த ஆண்டு நன்கொடையாளர்களின் பங்களிப்புடன் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்கள் இப்போதும் தயாராக உள்ளனர். இதற்கான வாய்ப்புகளை நாம் தவறவிடக்கூடாது. கடந்த ஆண்டு எடுத்த முயற்சியினால் இப்போது பாதுகாக்கப்பட்டுள்ளோம். எதிர்காலத்திற்காக நாம் அதை மீண்டும் செய்யவேண்டும்.
வேறு நிதியில்லை என்றால்தான் பொது நிதியை பயன்படுத்த வேண்டும். தண்ணீர் சேகரிப்புக்கு ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.