திம்பம் மலைப்பாதையில் நுழைவுக்கட்டணம் வசூலிக்கக்கூடாது; கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு
திம்பம் மலைப்பாதையில் நுழைவுக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று கலெக்டர் சி.கதிரவனிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
ஈரோடு,
மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
முன்னாள் எம்.எல்.ஏ. சுப்பு தலைமையில் பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறிஇருந்ததாவது:–
திம்பம் மலைப்பாதையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அங்கு நுழைவு கட்டணம் வசூலிப்பது, எடை அளவு காண்பது ஆகிய நடவடிக்கைகள் மூலமாக போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்காது. அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் பழுதடையும்போது போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. திம்பம் மலைப்பாதையில் வசூலிக்கப்படும் நுழைவுக்கட்டணம் புலிகள் காப்பகத்தின் மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனவே வாகன வரைமுறைபடுத்தும் நடவடிக்கைக்கு முன்னுரிமை அளிக்காமல் வனத்துறையின் விருப்பங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக உள்ளது.
போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண சாலையின் வடிவமைப்பை வல்லுனர்களை கொண்டு பரிசீலிக்க வேண்டும். இலகு ரக சரக்கு மற்றும் பயணிகள் வாகனத்துக்கு விதிக்கப்பட்டு உள்ள நுழைவுக்கட்டணம், நேர கட்டுப்பாடு மற்றும் வனத்துறை அறிவித்து உள்ள கட்டாய எடை அளவு அளவை செய்தல் ஆகியவற்றில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும். அதிக எடை, அதிக உயரம், அதிக நீளமுடைய வாகனங்களை வரைமுறைபடுத்துவது பற்றி எந்த ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் நுழைவு கட்டணம் வசூலிப்பதை முற்றிலுமாக கைவிட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜூலை மாதம் 1–ந் தேதி காலை 10 மணிக்கு பண்ணாரி வனத்துறை சோதனை சாவடி அருகில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
ஈரோடு கருங்கல்பாளையம் ராஜகோபால்தோட்டம் பகுதியை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவியான லட்சுமி பிரியா என்பவர் தனது தாயுடன் கொடுக்க வந்த மனுவில் கூறிஇருந்ததாவது:–
நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் ஆயுர்வேதம் பிரிவில் 4–ம் ஆண்டு பிடித்து வருகிறேன். எனது குடும்பத்தில் நான் முதல் பட்டதாரி. கடந்த 3 ஆண்டுகளாக எனது கல்வி கட்டணத்தை முழுமையாக செலுத்திவிட்டேன். எனது தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்துவிட்டார். எனது தாய் ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். எனது தங்கை பிளஸ்–2 படித்துவிட்டு உயர்கல்வி படிக்க உள்ளார். இந்தநிலையில் குடும்ப ஏழ்மை நிலை காரணமாக 4–ம் ஆண்டு கல்விக்கட்டணத்தை செலுத்த முடியவில்லை. இதனால் கல்லூரியில் இருந்து என்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். எனவே எனக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார்.
தமிழ்நாடு பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:–
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக ஈரோடு மாவட்டத்தில் 476 பேர் வேலை செய்து வருகிறார்கள். பி.எஸ்.என்.எல். நிர்வாகம் சார்பில் ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்கவில்லை. இதனால், ஒப்பந்ததாரர்கள், எங்களுக்கு கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. எனவே எங்களுக்கான சம்பள நிலுவையை வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:–
பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் மழைநீரை சேமிக்க முடியாது. கிராம சபை கூட்டங்களில் குடிநீர் சிக்கனம், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட தீர்மானங்கள் இருந்தும் குடிநீர் தட்டுப்பாடு தீரவில்லை. எனவே கிராம சபை கூட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
ஈரோடு பெரியசேமூர் எஸ்.எஸ்.பி.நகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், “ஈரோடு மாநகராட்சி 2–வது மண்டலத்துக்கு உள்பட்ட 18–வது வார்டில் மயானம் உள்ளது. எஸ்.எஸ்.பி.நகர், முத்துமாணிக்கம்நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் இறந்தால், அந்த மயானத்துக்கு கொண்டு சென்று புதைக்கப்பட்டு வருகிறது. அங்கு செல்லும் வழியில் புதர்மண்டி கிடக்கிறது. எனவே மயானம் பகுதியை சீரமைத்து சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“, என்று கூறி இருந்தனர்.
தமிழ்நாடு தலித் விடுதலை இயக்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், “மொடக்குறிச்சி அ கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் சிலருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே பட்டா வழங்கப்பட்ட இடத்தில் குடியிருந்து வருபவர்கள் அருகில் உள்ள காலியிடத்தை ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். மேலும், பொது தேவைக்காக விடப்பட்ட இடத்தில் கோவில் கட்டப்பட்டு உள்ளது. எனவே அந்த கோவிலை அகற்றி வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கொடுக்க வேண்டும்.“, என்று கூறப்பட்டு இருந்தது.
அருந்ததியர் இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் என்.ஆர்.வடிவேல் மற்றும் அமைப்பினர் கொடுத்த மனுவில் கூறிஇருந்ததாவது:–
தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களில் மிகவும் பின்தங்கியுள்ள அருந்ததியர் சமூக மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 3.5 சதவீதம் தனி உள்இட ஒதுக்கீடு தமிழக அரசு வழங்கியுள்ளது. இது 2009–ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. அதன்படி அருந்ததியர், சக்கிலியர், மாதாரி, மாதிகா, தோட்டி, செம்மான், ஆதி ஆந்திரா ஆகிய 7 உட்பிரிவுகளும் அருந்ததியர் பட்டியலில் கொண்டு வரப்பட்டு உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கும்போது சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் அருந்ததியர் என சாதிசான்றிதழ் வழங்குவதில்லை. கிராமப்புறங்களில் வழக்கமாக அழைக்கும் பெயரில் சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ–மாணவிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அரசு உத்தரவுபடி சாதிசான்றிதழ் வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.
ஈரோடு சாஸ்திரிநகர் விநாயகர்கோவில்வீதியை சேர்ந்த சிலர் கொடுத்த மனுவில், “நாங்கள் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறி உள்ளோம். கடந்த 6–ந் தேதி எங்களது பகுதியை சேர்ந்த ஒருவர் இறந்துவிட்டார். அவருடைய உடலை அங்குள்ள மயானத்தில் புதைக்க மறுப்பு தெரிவித்தனர். எனவே அங்கு உடலை கொண்டு செல்ல மறுப்பு தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.“, என்று கூறி இருந்தனர்.
சிவகிரி அருகே கந்தசாமிபாளையம் காந்திநகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், “எங்களுக்கு அரசு இலவச வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.“, என்று கூறி இருந்தனர்.
திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் பேசிய கருத்துக்கு எதிராக சாதி பெயரை சொல்லி திட்டியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆதித்தமிழர் பேரவை சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
ஊஞ்சலூர் அரசு மேல்நிலை பள்ளிக்கூடம், ஈரோடு கலைமகள் கல்வி நிலையம், தாமரைபாளையம் அரசு மேல்நிலை பள்ளிக்கூடம் ஆகிய பள்ளிக்கூடங்களில் கடந்த 2017–2018 ஆம் கல்வி ஆண்டில் படித்த மாணவ–மாணவிகள் விலையில்லா மடிக்கணினி கேட்டு கோரிக்கை மனு கொடுக்க வந்திருந்தனர். அவர்கள் மாவட்ட கலெக்டர் சி.கதிரவனை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் இருந்து மொத்தம் 329 மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர். வழக்கத்தை விட மனு கொடுக்க வரும் கூட்டம் நேற்று அதிகமாக இருந்தது. இதனால் மனுக்களை விரைந்து பெற கலெக்டர் கதிரவன் நடவடிக்கை எடுத்தார்.