நாமக்கல்லில் மனைவி, மாமியாரை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயற்சி கம்ப்யூட்டர் என்ஜினீயருக்கு போலீஸ் வலைவீச்சு


நாமக்கல்லில் மனைவி, மாமியாரை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயற்சி கம்ப்யூட்டர் என்ஜினீயருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 24 Jun 2019 10:15 PM GMT (Updated: 24 Jun 2019 9:03 PM GMT)

நாமக்கல்லில் மனைவி, மாமியாரை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற வழக்கில் கம்ப்யூட்டர் என்ஜினீயரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாமக்கல்,

நாமக்கல் அன்புநகரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி வளர்மதி (வயது 51). இவர்களது மகள் ரூபிகாவுக்கும் (30), கரூர் மூலிமங்கலம் பகுதியை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் சிவபிரகாசம் (35) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி சிவபிரகாசம் மற்றும் அவரது மனைவி ரூபிகா ஆகியோருக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதை தட்டிக்கேட்ட மாமனார் தங்கவேலுவை தாக்கி, சிவபிரகாசம் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த தங்கவேல் இறந்து விட்டார்.

கொலை செய்ய முயற்சி

இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த நாமக்கல் போலீசார் சிவபிரகாசத்தை கைது செய்தனர். தற்போது ஜாமீனில் வெளியே வந்த அவர் மனைவியை குடும்பம் நடத்த அழைத்து உள்ளார். ஆனால் ரூபிகா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை நாமக்கல் அன்புநகர் வந்த சிவபிரகாசம் மனைவி ரூபிகா, மாமியார் வளர்மதி ஆகிய இருவரையும் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து மாமியார் வளர்மதி நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கம்ப்யூட்டர் என்ஜினீயர் சிவபிரகாசத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story