30 வருடங்களாக கோவில் திருவிழாவில் பங்கேற்க விடாமல் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு பாதிக்கப்பட்டவர்கள், கலெக்டரிடம் மனு


30 வருடங்களாக கோவில் திருவிழாவில் பங்கேற்க விடாமல் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு பாதிக்கப்பட்டவர்கள், கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 25 Jun 2019 4:30 AM IST (Updated: 25 Jun 2019 2:55 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே 30 வருடங்களாக கோவில் திருவிழாவில் பங்கேற்க விடாமல் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் சிவராசு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள்.

அப்போது திருச்சியை அடுத்த மணிகண்டம் அருகே உள்ள அருவாக்குடி கிராமத்தை சேர்ந்த பழனிசாமி என்பவர் பெண்கள் மற்றும் சிறுவர்களுடன் வந்தார். அவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

அருவாக்குடி கிராமத்தில் 120 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இவர்களில் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த 30 குடும்பத்தினரை மட்டும் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பங்கேற்க அனுமதிப்பது கிடையாது. கடந்த 30 வருடங்களாக இந்த நிலை உள்ளது. எங்களிடம் கோவில் நிர்வாகிகள் வரி வசூலிப்பதும் கிடையாது. இதுபற்றி கேட்டால் எங்கள் மீது சாமி குற்றம் இருப்பதாகவும் அதனை நீங்கள் அனுபவித்து தான் ஆக வேண்டும் என்றும் கூறுகிறார்கள். நாங்கள் கோவிலுக்கு செல்ல முடியாமல், ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டு இருப்பதால் மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளோம். இந்நிலையில் ஜூலை மாதம் 7-ந்தேதி காப்பு கட்டி கோவில் திருவிழா தொடங்க உள்ளது. எனவே இந்த ஆண்டாவது நாங்கள் கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த பிரச்சினை பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

அரை நிர்வாண கோலம்

ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் இலவச கட்டாய கல்வி சட்டத்தில் விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கு அனுமதி வழங்கிய பள்ளி நிர்வாகம் அந்த மாணவர்களிடம் கட்டணம் வசூலித்து உள்ளது. அரசு உத்தரவை மீறி கட்டணம் வசூலித்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்தவர்கள் அரை நிர்வாண கோலத்தில் வந்து மனு கொடுத்தனர்.

தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் அலகரை ஊராட்சியின் ஒரு துணை கிராமமாக உள்ள கோடியம்பாளையத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என கோரி நெசவாளர் பெண்கள் மேம்பாட்டு இயக்கத்தை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இதே போல துறையூர் தாலுகா ஆதனூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நிதி நிறுவனங்களின் ஏஜெண்டு போல் இருந்து ஏழை கூலிதொழிலாளர்களிடம் ரூ.20 லட்சம் வரை மோசடி செய்த தம்பதியினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி மனு கொடுத்தனர்.

மருத்துவமனை மீது புகார்

திருச்சியை அடுத்த குண்டூர் அருகே உள்ள அய்யம்பட்டியை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் பிறந்து 20 நாட்களே ஆன குழந்தையை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து இருந்தேன். தவறான சிகிச்சையால் அந்த குழந்தை இறந்து விட்டது. ஆனால் குழந்தை உயிருடன் இருப்பதாக கூறி எங்களிடம் ரூ.1 லட்சத்து 74 ஆயிரம் வசூலித்த மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது. ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுனர் சங்கத்தினர் திருச்சி என்.எஸ்.பி. சாலையில் ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என கோரி மனு கொடுத்தனர்.

பாலக்கரை பருப்பு கார தெருவை சேர்ந்த பழனியப்பன் என்பவர் தனது எதிர்வீட்டில் வசிப்பவர் 20-க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்து வருவதால் நாங்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி மனு கொடுத்தார். துறையூர் தாலுகா பச்ச மலையில் கோம்பை கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என அக்கிராமத்தை சேர்ந்தவர்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

பட்டதாரி மனு

துறையூர் தாலுகா நரசிங்கபுரத்தை சேர்ந்த பால்ராஜ் என்பவர் கொடுத்த மனுவில் அருந்ததியர் இனத்தை சேர்ந்த நான் பி.ஏ. படித்து உள்ளேன். நரசிங்கபுரம் ஊராட்சி செயலாளர் பணிக்கு நடந்த நேர்முக தேர்வில் பங்கேற்றேன். வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நான் முதலிடத்தில் இருந்தாலும் ஒரு ஆண்டுக்கும் மேலாக எனக்கு பணி ஆணை வழங்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் எனக்கு பணி ஆணை வழங்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.


Next Story