பெங்களூரு நூலக ஒப்பந்த ஊழியர் தற்கொலை முயற்சி குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க கோரிக்கை


பெங்களூரு நூலக ஒப்பந்த ஊழியர் தற்கொலை முயற்சி குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 25 Jun 2019 4:47 AM IST (Updated: 25 Jun 2019 4:47 AM IST)
t-max-icont-min-icon

குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க கோரி பெங்களூரு விதானசவுதாவில் நேற்று நூலக ஒப்பந்த ஊழியர் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பெங்களூரு,

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா அனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரேவண்ண குமார் (வயது 44). இவர் நூலகம் ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று பெங்களூரு விதானசவுதாவுக்கு சில ஆவணங்களுடன் ரேவண்ண குமார் வந்தார். 3-வது மாடியில் உள்ள கழிவறைக்கு சென்ற ரேவண்ண குமார் தனது கழுத்து மற்றும் மணிக்கட்டை கூரிய ஆயுதத்தால் அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதை பார்த்தவர்கள் ரேவண்ண குமாரை, போலீசாரின் உதவியுடன் மீட்டனர். பின்னர் போலீஸ் வாகனத்தில் அவரை ஏற்றி போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தற்கொலைக்கு முயன்ற ரேவண்ண குமார் எழுதி வைத்திருந்த கடிதம் போலீசாருக்கு கிடைத்தது. அதில், ‘ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலி ஊழியராக நூலகத்தில் 6 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு தினக்கூலியை தவிர்த்து வேறு எந்த உதவியும் அரசு செய்யவில்லை. மேலும் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி, பிரதமர், மாநில அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தோம்.

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன். இது அரசுக்கான பலியாக இருக்கட்டும். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனது சாவுக்கு அரசே காரணம். நான் இறந்த பிறகு எனது இறுதிசடங்கை முதல்-மந்திரி நடத்த வேண்டும்‘ என்பன போன்ற அம்சங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன.

இதுகுறித்த புகாரின் பேரில் விதானசவுதா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் நேற்று விதானசவுதாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, கர்நாடக சட்டசபை கட்டிடமான விதானசவுதாவில் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உயர் பதவிகளில் உள்ள அரசு அதிகாரிகளின் அலுவலகங்கள் உள்ளன. இதனால் விதான சவுதாவில் எப்போதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். இந்த நிலையில் தான் கையில் ஆயுதங்களுடன் விதான சவுதாவுக்குள் ரேவண்ண குமார் நுழைந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் விதானசவுதாவில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதா? என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Next Story