ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், தலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு - குடங்களுடன் காத்திருக்கும் கிராம மக்கள்


ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், தலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு - குடங்களுடன் காத்திருக்கும் கிராம மக்கள்
x
தினத்தந்தி 25 Jun 2019 3:45 AM IST (Updated: 25 Jun 2019 5:57 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. குடங்களுடன் கிராம மக்கள் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

செம்பட்டி,

பருவமழை பொய்த்து போனதால் தமிழகத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு திண்டுக்கல் மாவட்டமும் விதி விலக்கு அல்ல. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம மக்கள் பல கிலோமீட்டர் தூரம் சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தை பொறுத்தவரையில் ஆத்தூர், அக்கரைப்பட்டி, காந்திகிராமம், அம்பாத்துரை, என்.பஞ்சம்பட்டி, கலிக்கம்பட்டி, பித்தளைப்பட்டி, பிள்ளையார்நத்தம், மணலூர், சித்தரேவு, போடிக்காமன்வாடி, பாளையங்கோட்டை, சீவல்சரகு உள்ளிட்ட 22 கிராம ஊராட்சிகள் உள்ளன.

இந்த ஊராட்சிகளில், ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக ஆழ்துளை கிணறுகள் வறண்டு விட்டன. நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. இதனால் தண்ணீர் வினியோகம் செய்ய முடியாமல் ஊராட்சி நிர்வாகங்கள் பரிதவித்து வருகின்றன. குடிநீர் கிடைக்காமல் பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக சீவல்சரகு, வீரக்கல், வக்கம்பட்டி, சித்தரேவு, போடிக்காமன்வாடி, எஸ்.பாறைப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் 15 அல்லது 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் கிராம மக்கள் தண்ணீரை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. தினமும் குடிநீருக்காக ரூ.50 முதல் ரூ.60 வரை செலவு செய்ய வேண்டிய அவலநிலையில் கிராம மக்கள் உள்ளனர்.

எஸ்.பாறைப்பட்டி ஊராட்சி ராமநாதபுரத்தில் உள்ள குடிநீர் குழாய்கள் அருகே பல வண்ணங்களில் பிளாஸ்டிக் குடங்கள் தண்ணீருக்காக தவம் கிடக்கின்றன. தங்களது குடங்களை வரிசையாக வைத்து விட்டு, தண்ணீர் எப்போது வரும் என்று கிராம மக்கள் காத்திருக்கின்றனர்.

இந்த கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதற்கட்டமாக ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 22 ஊராட்சிகளில், கடந்த 10 வருடங்களாக செயல்பாட்டில் உள்ள ஆழ்துளை கிணறுகளின் எண்ணிக்கையை ஆய்வு செய்ய வேண்டும். தற்போது அவற்றின் நிலைமை என்ன?, எத்தனை ஆழ்துளை கிணறுகளில் மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது என்பதை கணக்கிட வேண்டும்.

இதில் பெரும்பாலான மின்மோட்டார்களை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டாலும், அடுத்த வருடத்தில் அவை பயனற்று போய் விடுகிறது. எனவே ஆழ்துளை கிணறுகளை தூர்வாரி சுத்தம் செய்து, அதில் பொருத்தப்பட்ட மின் மோட்டார்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஊராட்சி நிர்வாகத்துக்கு உள்ளது.

அப்போது தான், பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய முடியும். இதற்கான முயற்சியில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்பது கிராம மக்களின் விருப்பம் ஆகும்.

Next Story