ஒரத்தநாடு அருகே விவசாயி வீட்டில் 32 பவுன் நகைகள்-ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் திருட்டு


ஒரத்தநாடு அருகே விவசாயி வீட்டில் 32 பவுன் நகைகள்-ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 26 Jun 2019 3:45 AM IST (Updated: 26 Jun 2019 12:25 AM IST)
t-max-icont-min-icon

ஒரத்தநாடு அருகே விவசாயி வீட்டில் 32 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கிளாமங்கலம் குஞ்சான் தெருவை சேர்ந்தவர் முத்தையன்(வயது 50). விவசாயி. இவருடைய மனைவி மஞ்சுளா(44). சம்பவத்தன்று காலை வீட்டின் கதவை பூட்டாமல், பூட்டை மட்டும் போட்டு விட்டு முத்தையனும் அவரது மனைவி மஞ்சுளாவும் அருகே உள்ள வயலுக்கு சென்றனர்.

சிறிது நேரம் கழித்து வயலில் இருந்து திரும்பிய முத்தையனும், அவரது மனைவி மஞ்சுளாவும் வீட்டுக்குள் சென்றனர். அப்போது வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பீரோவில் வைத்து இருந்த 32 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை பார்த்தனர். அதை காணாததும், நகை மற்றும் பணத்தை யாரோ திருடிச்சென்றதும் தெரிய வந்தது.

வலைவீச்சு

கணவன்-மனைவி இருவரும் வயலுக்கு சென்றதையும், வீடு பூட்டாமல் இருந்ததையும் நன்கு தெரிந்தவர்கள் முத்தையன் வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து முத்தையன் பாப்பாநாடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம மனிதர்களை தேடி வருகிறார்கள்.

விவசாயி வீடு புகுந்து 32 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் கிளாமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story