இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி மானியம் வழங்க இலக்கு கலெக்டர் தகவல்


இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி மானியம் வழங்க இலக்கு கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 26 Jun 2019 4:30 AM IST (Updated: 26 Jun 2019 12:42 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்திற்கு இந்த ஆண்டு இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் அண்ணாதுரை கூறி உள்ளார்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும், படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 2019-20-ம் ஆண்டிற்கு தஞ்சை மாவட்டத்திற்கு 175 பேர் பயனடையும் வகையில் ரூ.1 கோடியே 5 லட்சம் மானியம் வழங்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த திட்டத்தின் கீழ் சுயமாக தொழில் தொடங்க உற்பத்தி பிரிவின் கீழ் ரூ.10 லட்சம் வரையிலும், சேவைப்பிரிவில் ரூ.3 லட்சம் வரையிலும், வியாபாரங்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் கடன்பெற மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை தலைவராக கொண்ட தேர்வுக்குழு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யும். திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதிக பட்சமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை தமிழக அரசால் மானியமாக வழங்கப்படும்.

இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவினர் 18 முதல் 35 வயது வரையிலும், சிறப்பு பிரிவினர் மற்றும் பெண்கள் 18 முதல் 45 வயது வரையிலும் இருக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை இருக்கலாம். திட்ட மதிப்பீட்டில் பொதுப்பிரிவினர் 10 சதவீதமும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர், மகளிர் மற்றும் திருநங்கைகள் 5 சதவீதமும் தனது பங்காக செலுத்தலாம்.

தகுதியான தொழில்களாக நேரடியான விவசாயம் தவிர பொருளாதார அடிப்படையில் லாபகரமான தொழில்கள் தொடங்கலாம். இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்புவோர் www.msm-e-o-n-l-i-ne.tn.gov.in/uye-gp என்ற இணைய தளம் மூலமாக விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் இந்த திட்டம் தொடர்பான விழிப்புணர்வு முகாம் வருகிற 2-ந்தேதி பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 4-ந்தேதி திருப்பனந்தாள் ஒன்றிய அலுவலகத்திலும், 9-ந்தேதி மதுக்கூர் ஒன்றிய அலுவலகத்திலும், 11-ந்தேதி திருவோணம் ஒன்றிய அலுவலகத்திலும் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. அந்தந்த பகுதிகளில் உள்ள பயனாளிகள் இதில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள மாவட்ட தொழில்மைய பொது மேலாளரை அணுகலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

Next Story