100 நாள் வேலை திட்டத்தில் சம்பளத்தை குறைக்காமல் வழங்கக்கோரி மனு கொடுக்கும் போராட்டம்


100 நாள் வேலை திட்டத்தில் சம்பளத்தை குறைக்காமல் வழங்கக்கோரி மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 26 Jun 2019 4:30 AM IST (Updated: 26 Jun 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

100 நாள் வேலை திட்டத்தில் சம்பளத்தை குறைக்காமல் வழங்கக்கோரி தஞ்சையில் விவசாய தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்,

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தஞ்சை ஒன்றியக்குழு சார்பில் தஞ்சை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் அபிமன்னன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் அந்தோணிசாமி, ஒன்றிய தலைவர் நாகலிங்கம், ஒன்றிய பொருளாளர் விஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் மாலதி, விவசாய சங்க ஒன்றிய தலைவர் ஞானமாணிக்கம், ஒன்றிய செயலாளர் சவுந்தர்ராஜன் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

அனைவருக்கும் வேலை

தொழிலாளர்கள் வட்டார வளர்ச்சி அதிகாரி சூரியநாராயணனிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்தி உள்ள அடிப்படையில் குறைக்காமல் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் அன்று விடுப்புடன் கூடிய முழு சம்பளத்தை அடையாள அட்டை வைத்துள்ள அனைவரின் வங்கி கணக்கில் ஏற்றி விட வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.229 சம்பளத்தை குறைக்காமல் வழங்க வேண்டும். வேலை அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு உடனே வழங்க வேண்டும். சுழற்சி முறையை நிறுத்தி விட்டு அனைவருக்கும் தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story