பெருந்துறை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மயக்கவியல் துறை டாக்டரை தற்காலிக பணிநீக்கம் செய்ய பரிந்துரை - கலெக்டர் நடவடிக்கை


பெருந்துறை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மயக்கவியல் துறை டாக்டரை தற்காலிக பணிநீக்கம் செய்ய பரிந்துரை - கலெக்டர் நடவடிக்கை
x
தினத்தந்தி 26 Jun 2019 4:45 AM IST (Updated: 26 Jun 2019 12:48 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மயக்கவியல் துறை டாக்டரை தற்காலிக பணிநீக்கம் செய்ய பரிந்துரை செய்து கலெக்டர் சி.கதிரவன் நடவடிக்கை எடுத்து உள்ளார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு பொதுமக்களுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இங்கு பணிபுரியும் டாக்டர்கள் சிலர் பணி நேரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பணியாற்றாமல், தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சென்று வருவதாக கலெக்டர் சி.கதிரவனுக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து உரிய சோதனை நடத்த ஈரோடு ஆர்.டி.ஓ., பெருந்துறை தாசில்தார் ஆகியோருக்கு கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டார். அதன்பேரில் ஏற்கனவே அதிகாரிகள் நடத்திய சோதனையில் கதிரியக்கத்துறை மருத்துவ நிபுணர் டாக்டர் வி.கே.வெங்கடேஷ்வரன் அரசு ஆஸ்பத்திரி பணி நேரத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றிய குற்றத்துக்காக அவர்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் பெருந்துறை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் மீது சஸ்பெண்ட் (தற்காலிக பணிநீக்கம்) செய்ய கலெக்டர் பரிந்துரை செய்து உள்ளார்.

அதுபற்றிய விவரம் வருமாறு:–

பெருந்துறை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மயக்கவியல் துறை நிபுணராக பணியாற்றி வருபவர் டாக்டர் எம்.கோபிநாதன். இவர் பணி நேரத்தில் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் அறுவை சிகிச்சைக்கு உறுதுணையாக இருக்காமல், தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வருவதாக புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து, இதுபற்றி முழுமையாக விசாரிக்க பெருந்துறை தாசில்தார் துரைசாமிக்கு கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டார்.

அதன்படி அவர் சோதனை செய்தபோது டாக்டர் கோபிநாதன், பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வருகைப்பதிவேட்டில் கையொப்பம் வைத்தும், அங்குள்ள பயோ மெட்ரிக் வருகைப்பதிவு கருவியில் வருகையை பதிவு செய்தும் இருந்தார். ஆனால் அவர் ஆஸ்பத்திரியில் பணியில் இல்லை.

எனவே அவர் குறிப்பிட்ட தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தபோது அங்கு டாக்டர் கோபிநாதன் பணியில் ஈடுபட்டு இருந்தார். மேலும், இதுகுறித்த விசாரணையில் டாக்டர் கோபிநாதன் தினமும் அரசு ஆஸ்பத்திரியில் வருகைப்பதிவு செய்து விட்டு, ஆஸ்பத்திரி துணை கண்காணிப்பாளரின் அனுமதி இல்லாமலேயே வெளியில் புறப்பட்டு சென்று விடுவதாகவும், அவர் வழக்கமாக செல்லும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிப்பதாகவும் தெரியவந்தது.

இதுகுறித்து தாசில்தார் துரைசாமி ஆய்வு அறிக்கையை கலெக்டரிடம் சமர்ப்பித்தார். அதைத்தொடர்ந்து அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டிய டாக்டர், அங்கு இல்லாமல் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று வந்ததால் ஏழை நோயாளிகள் பலரும் முறையான அறுவை சிகிச்சை செய்து கொள்ளாமல் பாதிப்பு அடைந்து இருக்கின்றனர்.

இந்த காரணத்துக்காக டாக்டர் எம்.கோபிநாதனை தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் சி.கதிரவன் சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளார். மேலும், டாக்டர் கோபிநாதனுக்கு பதிலாக தகுதியான மயக்கவியல் டாக்டரை நியமனம் செய்து பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் தடையில்லாமல் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்று அவர் மருத்துவக்கல்லூரி முதல்வருக்கும் அறிவுறுத்தி உள்ளார்.

பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அடுத்தடுத்து 2 டாக்டர்கள் மீது கலெக்டரின் நடவடிக்கை பாய்ந்து இருப்பது அரசு டாக்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story