1,295 கிராமங்களுக்கு தினமும் குடிநீர் வினியோகம் - கலெக்டர் வீரராகவ ராவ் தகவல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,295 குக்கிராமங்களுக்கு தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் யூனியனுக்கு உட்பட்ட கிராமங்களில் பொதுமக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்திட ஏதுவாக உள்ளாட்சி துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள குடிநீர் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் நேரில் ஆய்வு செய்தார். முதலில் அவர் ஆர்.காவனூர் கிராமத்தில் ரூ.2½ லட்சம் மதிப்பில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யும் பணிகளையும், தெற்குத்தரவை ஊராட்சிக்கு உட்பட்ட வைரவன்கோவில் கிராமத்தில் ரூ.4½ லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளிக் கிணற்றையும் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து கலெக்டர் வீரராகவ ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:–
ராமநாதபுரம் மாவட்ட பொதுமக்கள் வறட்சியின் காரணமாக பாதிக்கப்படாத வகையில் சீரான குடிநீர் வழங்கிட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போதைய சூழ்நிலையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 79.4 எம்.எல்.டி. அளவு குடிநீர் தேவை என்று கணக்கிடப்பட்டுள்ளது.
காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு சராசரியாக 35 எம்.எல்.டி. அளவிலும், உள்ளாட்சித் துறையின் மூலம் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு, திறந்தவெளி கிணறு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோக நிலையம் போன்ற குடிநீர் ஆதாரங்கள் மூலமாக சராசரியாக 38 எம்.எல்.டி. அளவிலும் பெற்று பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக, மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகளில் சாயல்குடி பேரூராட்சி தவிர்த்து, மீதமுள்ள 6 பேரூராட்சி பகுதிகளில் தினந்தோறும் என்ற அடிப்படையில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சாயல்குடி பேரூராட்சி பகுதியில் 1 நாள் இடைவெளியில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இதேபோல ஊரகப்பகுதிகளில் 1,295 குக்கிராமங்களுக்கு தினந்தோறும் என்ற அடிப்படையிலும், 788 குக்கிராமங்களுக்கு 1 நாள் இடைவெளியிலும், 223 கிராமங்களுக்கு 2 நாட்களுக்கு ஒரு முறை என்ற அடிப்படையிலும் குடிநீர் வினியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதுள்ள வறட்சியான சூழ்நிலையை கணக்கில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரூ.13.82 கோடி மதிப்பில் 377 குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுதவிர காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் வழங்கிட இயலாத கிராமங்கள் மற்றும் உள்ளூர் குடிநீர் ஆதாரங்கள் ஏற்படுத்த இயலாத நிலையில் உள்ள கிராமங்கள் என்ற அடிப்படையில் 45 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த கிராமங்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் டேங்கர் லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய உதவி செயற்பொறியாளர் (காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம்) ஜவகர் கென்னடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டி, ராமமூர்த்தி, உதவி பொறியாளர் ஹேமா உள்பட பலர் உடனிருந்தனர்.