பெங்களூருவில் இருந்து திண்டுக்கல்லுக்கு, ஆம்னி பஸ்சில் கடத்திய 600 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - டிரைவர்கள் உள்பட 5 பேர் கைது
பெங்களூருவில் இருந்து திண்டுக்கல்லுக்கு கடத்திய 600 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. டிரைவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சின்னாளப்பட்டி,
பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ஆம்னி பஸ்சில் திண்டுக்கல்லுக்கு புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சக்திே்வல் உத்தரவின்பேரில் வேடசந்தூர்்-திண்டுக்கல், மதுரை-திண்டுக்கல் பைபாஸ் சாலை வழியாக செல்லும் ஆம்னி பஸ்களை போலீசார் கண்காணித்தனர்.
இந்தநிலையில் திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் அண்ணாமலையார் மில்ஸ் காலனி-வெள்ளோடு காபி கடை பிரிவு இடையே தனியார் ஆம்னி பஸ் நின்று கொண்டிருந்தது. பயணிகள் சிலர் இறங்கி நின்று கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு காரும், மினி லாரியும் ஆம்னி பஸ் அருகே வந்து நின்றது. சிறிது நேரத்தில் அந்த காரில் வந்த 3 பேர், ஆம்னி பஸ்சில் இருந்து 10 மூட்டைகளை இறக்கி மினி லாரியில் ஏற்றினர்.
இதனையடுத்து அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அம்பாத்துறை போலீசார் சந்தேகத்தின் பேரில் அங்கு சென்றனர். பின்னர் அந்த மூட்டைகளை போலீசார் சோதனை செய்தனர்.
அந்த மூட்டைகளுக்குள், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து ஆம்னி பஸ்சில் பயணம் செய்த மதுரை, நெல்லை, திருவனந்தபுரம் ஆகிய ஊர்களுக்கு சென்ற பயணிகளை வேறு பஸ்சில் போலீசார் அனுப்பி வைத்தனர்.
ஆம்னி பஸ், கார், மினிலாரி ஆகியவற்றை பறிமுதல் செய்து அம்பாத்துறை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் மூட்டைகளில் இருந்த 600 கிலோ புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து அம்பாத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பெங்களூருவில் இருந்து திண்டுக்கல்லில் விற்பனை செய்வதற்காக புகையிலை பொருட்களை ஆம்னி பஸ்சில் கடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும் அந்த மூட்டைகளை துணிகள் என்று கூறி மாலிக் என்பவர் பஸ்சில் ஏற்றி அனுப்பியதாக டிரைவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து 2 டிரைவர்கள் மற்றும் புகையிலை பொருட்கள் ஆம்னி பஸ்சில் இருந்து இறக்கி கொண்டு செல்ல வந்த 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story