பவானி அருகே மெக்கானிக்கை போலீசார் தாக்கியதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல்
பவானி அருகே மெக்கானிக்கை போலீசார் தாக்கியதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பவானி,
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காலிங்கராயன்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம். அவருடைய மகன் சந்தோஷ்குமார். மெக்கானிக். இவர் காலிங்ராயன்பாயைம் மெயின் ரோட்டில் லாரி பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவரது பட்டறைக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பழுதான லாரி ஒன்று வந்தது.
அந்த லாரியை சந்தோஷ்குமார் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் அந்த லாரி திருடப்பட்டது என்றும், அதை சந்தோஷ்குமார் திருடிக்கொண்டு வந்து விற்பனைக்காக வைத்திருக்கிறார் என்றும் விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு புகார் வந்தது.
அதைத்தொடர்ந்து விழுப்புரம் போலீசார் காலிங்கராயன்பாளையம் வந்து சித்தோடு போலீசாரின் உதவியுடன் சந்தோஷ்குமாரை பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது போலீசார் சந்தோஷ்குமாரை தாக்கியதாக உறவினர்கள் கூறினர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பொதுமக்களுடன் நேற்று மதியம் 1.30 மணி அளவில் லட்சுமிநகர்–பவானி செல்லும் சாலையில் ஒன்று திரண்டனர்.
பின்னர் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சித்தோடு போலீசார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதுபற்றி சந்தோஷ்குமாரின் உறவினர்கள் கூறும்போது, ‘உரிய முறையில் விசாரணை நடத்தி சந்தோஷ்குமாரை தாக்கிய விழுப்புரம் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
அதற்கு போலீசார், விசாரணை நடத்தி ‘நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் லட்சுமிநகர்–பவானி செல்லும் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.