சுல்தான்பேட்டை அருகே உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு; 22 விவசாயிகள் கைது
சுல்தான்பேட்டை அருகே உயர் மின் கோபுரம் அமைக்க அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 22 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுல்தான்பேட்டை,
சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் முதல் கரூர் மாவட்டம் புகளுர் வரை 1,853 கிலோ மீட்டர் தூரத்திற்கு 800 கிலோ வாட் திறன் கொண்ட மின் வழித்தடம் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை இந்திய பவர் கிரிட்நிறுவனம் மேற்கொள்கிறது. இந்த வழித்தடம் சத்தீஸ்கர், மராட்டியம், தெலுங்கானா, ஆந்திரா மற்றும் தமிழகம் என 5 மாநிலங்கள் வழியாக செல்கிறது. இதற்காக 5,530 உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. விவசாய நிலங்கள், குடியிருப்புபகுதிகளுக்கு மேல் இந்த வழித்தடம் செல்கிறது. இதற்காக அமைக்கப்படும் மின் கோபுரங்களால் விளைநிலம் பாதிக்கப்படுவதுடன், கதிர்வீச்சால் ஆபத்து ஏற்படும். ஆகவே இத்திட்டத்தை புதை வடம் வழியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என தமிழக விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி போராடி வருகின்றனர்.
இவர்களின் போராட்டத்திற்கு தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., கொ.ம.தே.க., அ.ம.மு.க., த.மா.கா. உள்ளிட்ட பல்வேறுகட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழகத்தில் கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, ஈரோடு உள்பட 13 மாவட்டங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க நிலம் அளவீடு செய்யும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியம் போகம்பட்டி பகுதியில் உயர்மின் கோபுரம் அமைக்க நிலம் அளவிடும் செய்யும் பணிக்காக அதிகாரிகள் வந்தனர். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் அங்கு திரண்டனர். நில அளவீடு செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன், சப்–இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெண்களை தவிர்த்து 22 பேரை சுல்தான்பேட்டை போலீசார் கைதுசெய்து செஞ்சேரி மலை பிரிவு அருகே உள்ளஒரு தனியார்திருமண மண்டபத்தில் காவலில் வைத்தனர்.
முன்னதாக, பெண் ஒருவர் அங்குள்ள உயர்மின்கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது போலீசார் அவரை அதில் இறங்கும்படி கேட்டுக்கொண்டனர். அதில் இருந்து அந்த பெண் இறங்கியதும் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்த பெண்கள், அவரை தூக்கி வைத்து தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் தங்களது இடத்தில் அளவீடு பணி நடப்பதையும், அதனைதடுக்க முயன்றவர்களை கைது செய்து அழைத்து சென்றதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமி ஒருவர், ஏன் இப்படி பண்றீங்க, எங்கள் நிலத்தை பறிச்சிடாதீங்க, என்று கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.