கூட்டுறவு வங்கி ஊழியர் வீட்டில் 44 பவுன் நகை கொள்ளை கதவை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை


கூட்டுறவு வங்கி ஊழியர் வீட்டில் 44 பவுன் நகை கொள்ளை கதவை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 27 Jun 2019 4:30 AM IST (Updated: 27 Jun 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே கூட்டுறவு வங்கி ஊழியர் வீட்டில் 44 பவுன் நகைகள் கொள்ளை போனது. கதவை உடைத்து கைவரிசை காட்டிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே காஞ்சிரகோடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 59). இவர் வீட்டின் அருகில் நகை பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார்.

மேலும், சாங்கையில் உள்ள கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக உள்ளார். இவருடைய மனைவி வனஜா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகளை நெல்லையில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

நேற்று முன்தினம் கிருஷ்ணன் தனது குடும்பத்தினருடன் நெல்லையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று இருந்தார். அங்கு தன்னுடைய பேத்தி பிறந்தநாள் விழாவில் பங்கேற்று விட்டு நேற்று மதியம் வீடு திரும்பினார்.

அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.

மேலும், அங்கு வைத்திருந்த 44 பவுன் நகைகளும் மாயமாகி இருந்தன. கிருஷ்ணன் குடும்பத்துடன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து நகையை கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கிருஷ்ணன் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தொடர்ந்து கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மோப்பநாய் சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி அந்த பகுதியில் சிறிது தூரம் ஓடியது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story