சிவகங்கை மாவட்டத்தில் தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை
சிவகங்கை மாவட்டத்தில் தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என்று தமிழ்நாடு கனிமநிறுவன மேலாண்மை இயக்குனர் மகேசன் காசிராஜன் தெரிவித்தார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பான ஆய்வு கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு கனிம நிறுவன மேலாண்மை இயக்குனர் மகேசன் காசிராஜன், தலைமையிலும் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் முன்னிலையில் நடைபெற்றது.
மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகைள் குறித்து மாவட்டத்தில் உள்ள நகராட்சி யூனியன் பேரூராட்சி அலுவலர்களுடன் அவர் ஆய்வு நடத்தினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) விஜயநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.பின்னர் மகேசன் காசிராஜன் பேசியதாவது:– சிவகங்கை மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 12 பேரூராட்சிகள் மற்றும் 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 445 கிராம ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் தங்குதடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் 2,723 குக்கிராமங்கள் உள்ளன. இதில் 1,730 குக்கிராமங்களுக்கு தினசரி குடிநீர்வினியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 993 குக்கிராமங்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இதில் 217 குக்கிராமங்கள் கோடைகாலத்தில் பாதிப்பிற்கு உள்ளாகும் என்பதை முன்னரே கண்டறியப்பட்டு ரூ.12 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மற்றபடி 3 நகராட்சிகள், 12 பேரூராட்சிகளில் சில இடங்களில் குடிநீர் தினசரியும் மற்றும் ஒருசில இடங்களில் ஒருநாள் விட்டு ஒருநாள் வழங்கப்பட்டு வருகிறது. வரும் நிதியாண்டில் நீர்நிலை ஆதாரங்களை சீர்செய்ய கூடுதல் நிதி கோரப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலை ஆதாரங்களும் சீர்செய்யும் பணி தொடங்கப்பட்டு நிறைவு பெறும் நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.