தனுஷ்கோடி கடற்கரையில் ஒதுங்கிய பீடி இலைகள்; கடலோர போலீசார் விசாரணை


தனுஷ்கோடி கடற்கரையில் ஒதுங்கிய பீடி இலைகள்; கடலோர போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 27 Jun 2019 4:15 AM IST (Updated: 27 Jun 2019 3:13 AM IST)
t-max-icont-min-icon

தனுஷ்கோடி கடற்கரையில் பீடி இலைகள் கரை ஒதுங்கின. இதுகுறித்து கடலோர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்திற்கு மிக அருகாமையில் இலங்கை கடல் பகுதி உள்ளதாலும் கடத்தல்காரர்கள் அவ்வப்போது ராமேசுவரம், தனுஷ்கோடி கடல் வழியாக கடல்அட்டை, கஞ்சா, பீடிஇலை உள்ளிட்ட போதை பொருட்களை கடத்தவது நடைபெற்று வருகிறது. ராமேசுவரம்,தனுஷ்கோடி கடல் வழியாக நடைபெறும் கடத்தலை தடுக்கும் பணியில் கடலோர போலீசார் கடற்கரை பகுதிகளில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் நேற்று கடற்கரையில் பல இடங்களில் பீடி இலைகள் கரை ஒதுங்கி கிடந்தன.இதுபற்றி கடற்கரையில் கடை வைத்துள்ள மீனவர்கள் கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தொடர்ந்து ராமேசுவரம் கடலோர காவல்நிலைய சப்–இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் காவலர்கள் நாகராஜ் அப்பாஸ் உள்ளிட்டோர் அங்கு விரைந்து சென்று கடற்கரையில் கரை ஒதுங்கி கடந்த பீடி இலைகளை பார்வையிட்டனர்.

இதுபற்றி கடலோர போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

தூத்துக்குடியில் இருந்து ஒரு படகில் ஏரளமான பீடி இலைகளை இலங்கைக்கு கடத்தி செல்லும் போது நடுக்கடலில் கடலோர காவல் படையினரை பார்த்து பயந்து பீடி இலை மூடைகளை கடலில் வீசியிருக்கலாம் அல்லது கடல் கொந்தளிப்பால் கடல் அலைகளின் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல் படகு கடலில் மூழ்கியதாலோ படகில் இருந்த பீடி இலைகள் கடலில் விழுந்திருக்கலாம். கடலில் விழுந்த பீடி இலைகள் கொண்ட மூடைகள் கடல் அலைகளின் வேகத்தால் கடந்த 25–ந் தேதி அன்று வாலிநோக்கம் கடற்கரையில் 8 பீடி இலை மூடைகளும் கீழக்கரை கடற்கரையில் 2 மூடைகளும் கரை ஒதுங்கின. தனுஷ்கோடி கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ள பீடி இலைகளும் அந்த பண்டல்களோடு சேர்ந்தவையாக தான் இருக்கும் என்று கருதப்படுகிறது. 3 இடங்களிலும் கரை ஒதுங்கியுள்ள பீடி இலைகள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்.

இலங்கையில் பீடி இலைகளுக்கு அதிக விலை கிடைக்கிறது.அதே பீடி இலைகளை தூத்துக்குடியில் இருந்து கப்பல் மூலமாக ஏற்றிச்சென்றால் 1 லட்சததிற்கு ரூ.65 ஆயிரம் சுங்கவரி விதிக்கப்படுகிறது. அதே 1 லட்சம் பீடிஇலைகளை படகு மூலமாக கடத்தல் காரர்கள் மூலம் கடத்தினால் 20 ஆயிரம் வரை செலவாவதுடன் இலங்கையிலும் அதிக விலை போவதால் அதிக லாபம் கிடைக்கிறது. இதனால் தான் சிலர் பீடி இலைகளை படகு மூலம் கடத்தல்காரர்கள் மூலம் கள்ளத்தனாக இலங்கைக்கு கடத்தி செல்வதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர். ராமேசுவரம், தனுஷ்கோடி கடற்கரை பகுதிகளில் இருந்து எந்தவொரு கடத்தல் பொருட்களும் படகு மூலமாக ஏற்றி கொண்டு செல்வது கிடையாது. இந்த கடற்கரை பகுதிகளில் கடலோர போலீசார் இரவு–பகலாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story