ரேஷன்கடையில் பொருட்கள் வழங்குவதில் முறைகேடு; பெண்கள் முற்றுகையிட்டு மனு
ராமநாதபுரம் மாவட்டம் இலந்தைகுளம் கிராமத்தில் ரேஷன்கடையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக கிராம பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.
ராமநாதபுரம்,
பரமக்குடி தாலுகா டி.கருங்குளம் அஞ்சல் பா.இலந்தைகுளம் பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் ரேஷன்கார்டுகளை ஒப்படைக்க போவதாக கூறி திரளாக வந்து கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். இவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:– எங்கள் பகுதியில் 250–க்கும் மேற்பட்டோர் வசித்து வருவதால் தனியாக ரேஷன்கடை செயல்பட்டு வருகிறது.
இந்த கடையில் மாதம் ஒருநாள் மட்டும்தான் பொருட்கள் வினியோகம் செய்கின்றனர். ரேஷன்அரிசி 35 கிலோவிற்கு பதிலாக 34 கிலோ மட்டுமே வினியோகம் செய்கின்றனர். 13 பேருக்கு கார்டு விடுபட்டு போனதால் அவர்களுக்கு ரேஷன் அரிசி வழங்க எங்களின் கார்டில் ஒருகிலோ பிடித்து கொள்கின்றனர். இதுதவிர, இரவு நேரங்களில் ஒரு மூடை ரேஷன்அரிசி ரூ.500–க்கு விற்பனை செய்கின்றனர்.
அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்காமலேயே வாங்கியதாக செல்போனுக்கு தகவல் வருகிறது. சீனி, மண்எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
இதுகுறித்து கிராமத்தினர் கேட்டால் கொலைமிரட்டல் விடுக்கப்படுகிறது. எனவே, எங்களுக்கு உரிய ஒதுக்கீட்டின்படி பொருட்கள் சரியான விலைக்கு வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கிராமத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து சாலைமறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.