பாமாயில் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும்; வியாபார தொழில்துறை சங்கம் வலியுறுத்தல்
விவசாயிகளின் நலன் கருதி பாமாயில் இறக்குமதிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி விருதுநகர் வியாபார தொழில்துறை சங்கத்தினர் மத்திய நிதி மந்திரிக்கு மனு அனுப்பி உள்ளனர்.
விருதுநகர்,
விருதுநகர் வியாபார தொழில்துறை சங்க தலைவர் வி.வி.எஸ்.யோகன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
மத்திய அரசின் வரவு–செலவு அறிக்கையில் கீழ் கண்ட எங்களது கருத்துகளை பரிசீலிக்க வேண்டுகிறோம். தற்சமயம் வருமானவரி விதிப்பின் கீழ் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் 30 சதவீத வரியினை பல்வேறு நிலையில் 10 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை விதிக்க வேண்டும். விற்பனை அடிப்படையில் 44–வது பிரிவின் கீழ் செலுத்த வேண்டிய கட்டாய வரியை 8 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும். விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகளுக்கு அவர்கள் உற்பத்தி செய்யும் எண்ணை வித்துகளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் பாமாயில் இறக்குமதிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்.
விருதுநகர்–மதுரை இடையே வணிக மையம் அமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு பயன் கிடைக்கும் வகையில் கேரளாவின் பம்பை ஆற்று நீரை விருதுநகர் மாவட்டத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதோடு, காவிரி–கோதாவரி நதி நீர் இணைப்பை விரைவு படுத்த வேண்டும். உணவு பொருட்கள் தயாரிக்கும் எந்திரங்கள் வாங்குவதற்கு மானியம் வழங்கிட வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் தொடங்கிட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
அரிசி, பருப்பு மாவுகளுக்கு ஜி.எஸ்.டி. வரி ஏதும் இல்லாத நிலையில் இட்லி மாவுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி. செலுத்தும் படிவத்தில் தவறுதலாக குறிப்பிட்டுள்ளதை மாற்றிக்கொள்ள வழிவகை வேண்டும். 2017–18–ம் நிதி ஆண்டிற்கான ஜி.எஸ்.டி. படிவத்தினை சரி செய்வதற்கு ஆகஸ்ட் 31–ந்தேதி வரை கால அவகாசம் தர வேண்டும். மதுரை–நெல்லை இடையே இருவழி ரெயில்பாதையை விரைந்து முடிக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.