குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் முக்காடு அணிந்து நூதன போராட்டம்


குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் முக்காடு அணிந்து நூதன போராட்டம்
x
தினத்தந்தி 27 Jun 2019 11:00 PM GMT (Updated: 27 Jun 2019 7:32 PM GMT)

பெரம்பலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் முக்காடு அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் கடந்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களாகவே பெரம்பலூரில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவில்லை. நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்று, தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, நேற்று தான் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி தலைமை தாங்கி, விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். கூட்டம் தொடங்கிய சில மணி நேரத்தில், அரசு அறிவித்தப்படி பெரம்பலூர் மாவட்டத்தில் படைப்புழு தாக்குதலுக்கான மக்காச்சோள பயிரினை பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை அரசு உடனடியாக வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும்.

போதிய மழையின்மை காரணமாக பெரம்பலூரை வறட்சி மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும். பிரதமர் வேளாண் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பயிர்காப்பீடு செய்த கரும்பு, மக்காச்சோளம், பருத்தி, வெங்காயம், மஞ்சள் போன்ற பயிர்களுக்கு இழப்பீடு கிடைத்திட மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

நூதன போராட்டம்

பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட கடன் அசல் ரூ.116 கோடியே 50 லட்சம் மற்றும் வட்டி ரூ.54 கோடி சேர்த்து வழிவகை கடனை பங்காக மாற்றிட பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளின் நலன்கருதி வழிவகை கடனுக்குரிய அசல், வட்டிக்குரிய தொகையை அரசே ஏற்றுக்கொண்டு, அந்த கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாயி ராஜா சிதம்பரம் தலைமையில் நூதன போராட்டமாக தங்களது தலையில் துண்டை முக்காடாக அணிந்து மாவட்ட வருவாய் அதிகாரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து விவசாயிகள் இது தொடர்பாக மனுவினை மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமியுடன் வழங்கி விட்டு, தங்களது இருக்கைகளுக்கு சென்றனர்.

கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்

இதையடுத்து கூட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டை தொடர்வதை சரி செய்ய வேண்டும். மின்கட்டணத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் முடிவினை தமிழக அரசு கைவிட வேண்டும். மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் கிராமசபை கூட்டங்களை அதிகாரிகள் நேர்மையாக நடத்த வேண்டும். மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க அதிகாரிகள் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும்.

கடந்த 2 ஆண்டுகளாக மாவட்டத்தில் நடைபெறாமல் உள்ள கல்விக்கடன், விவசாயக்கடன் வழங்கும் முகாம்கள் இந்த ஆண்டு நடத்த வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ரூ.6 ஆயிரம் நிதிஉதவி அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும்.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் ராஜேந்திரன் பேசுகையில், கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே, பெரம்பலூர் மாவட்டத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. பெரம்பலூரை வறட்சி மாவட்டமாக அறிவித்து, வங்கியில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்யவேண்டும், எறையூர் சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்றார்.

தடையில்லா சான்று

தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நீலகண்டன் பேசுகையில், பயிர்களுக்கு காப்பீட்டு தொகை கட்ட வேண்டும் என்று கட்டாயப்படுத்த கூடாது. மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு நிலவுகிறது. பொட்டாஷ் உரங்கள் கூட்டுறவு சங்கங்களில் சரியாக கிடைப்பதில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தட்டுப்பாடு இன்றி உரம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். விவசாயிகள் மின் இணைப்பு பெறுவதற்கு தடையில்லா சான்று கேட்பதை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும். பதிவு செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை பேசுகையில், சின்னமுட்லு அணையை கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பால் விலையை உயர்த்தி வழங்கிட வேண்டும். மாவட்டத்தில் ஏரி, குளங்களில் நடைபெற உள்ள குடிமராமத்து பணிகளை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் மாவட்ட அளவிலான அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story