கபிலர்மலை பகுதியில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து 46½ பவுன் நகை திருட்டு


கபிலர்மலை பகுதியில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து 46½ பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 28 Jun 2019 4:15 AM IST (Updated: 28 Jun 2019 2:35 AM IST)
t-max-icont-min-icon

கபிலர்மலை பகுதியில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து 46 பவுன் நகை திருட்டு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பரமத்திவேலூர்,

பரமத்திவேலூர் அருகே கபிலர்மலை கூத்தாடி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 40). இவர் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய தாயார் செல்லம்மாள் (65) மட்டும் இங்கு வசித்து வந்தார். கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு செல்லம்மாளை சுப்பிரமணி அமெரிக்கா அழைத்து சென்றுள்ளார். இந்தநிலையில் நேற்று காலை சுப்ரமணியின் உறவினர் முருகேசன், அவருடைய வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையறிந்த ஜேடர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மோப்பநாய் சீமா வரவழைக்கப்பட்டது. அது சுப்ரமணியின் வீட்டில் இருந்து கருக்கம்பாளையம் காலனி சென்றது. அவருடைய வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் முட்புதரில் பீரோவில் இருந்து உடைத்து எடுத்துச்செல்லப்பட்ட இரும்பு லாக்கர் பெட்டி கடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்த 34 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

46½ பவுன் நகை

கபிலர்மலை காந்தி நகரை சேர்ந்தவர் தனம் (45). இவர் நேற்று முன்தினம் இரவு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். பின்னர் நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 12 பவுன் தங்க நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

கபிலர்மலை திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மனைவி லட்சுமி (38). இவர்கள் நேற்று முன்தினம் இரவு கருக்கம்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு சென்றனர். பின்னர் அவர்கள் நேற்று காலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ½ பவுன் நகை மற்றும் ஒரு ஜோடி கொலுசு ஆகியவைற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

3 வீடுகளின் பூட்டை உடைத்து 46½ பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.50 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து ஜேடர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். இந்த சம்பவங்கள் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story