கடலூரில் தி.மு.க. பொதுக்கூட்டம் “அ.தி.மு.க. ஆட்சி விரைவில் கவிழும்” மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு


கடலூரில் தி.மு.க. பொதுக்கூட்டம் “அ.தி.மு.க. ஆட்சி விரைவில் கவிழும்” மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 29 Jun 2019 11:30 PM GMT (Updated: 29 Jun 2019 7:29 PM GMT)

அ.தி.மு.க. ஆட்சி விரைவில் கவிழும் என்று கடலூரில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

கடலூர், 

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 96-வது பிறந்தநாள் விழா மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை வெற்றிபெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது.

இதற்கு கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் பொன்முடி, சி.வெ.கணேசன், செஞ்சி மஸ்தான், அங்கயற்கண்ணி, சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், வீரபாண்டி ராஜா, சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்த வாக்காளர்களாகிய உங்களுக்கு நன்றி சொல்ல வந்து இருக்கிறேன்.

தலைவர் கலைஞர் நம்மை விட்டு மறைந்த பிறகு அந்த இடத்தை பூர்த்தி செய்ய ஸ்டாலினுக்கு தகுதி இருக்கிறதா? வெற்றிடத்தை நிரப்பிட முடியுமா? என்று தொடர்ந்து சில அரசியல் வாதிகள், சொல்லிக்கொண்டு அலைந்தார்கள். யார்-யாரோ சொன்னார்கள் டாக்டர்கள் சொன்னார்கள், பெரிய டாக்டர் சொன்னார், சின்ன டாக்டரும் சொன்னார், டாக்டர் அம்மாவும் சொன்னார். தி.மு.க. காணாமல் போக போகிறது, 4-வது இடத்துக்கு வரப்போகிறது, தி.மு.க. இந்த தேர்தலோடு அழிய போகிறது என்று சொன்னார்கள். என்ன நடந்து இருக்கிறது. அவர்கள் ஆசையில் மண் விழுந்திருக்கிறது அது தான் நடந்து முடிந்து இருக்கிறது.

தி.மு.க.வை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போயிருக்கிறார்கள். இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள் அனைத்தையும் இழந்து நிற்கிறார்கள், அனாதை தலைவர்களாக மாறி இருக்கிறார்கள்.

தலைவர் கலைஞர் இல்லாமல் சந்திக்கிற முதல் தேர்தல் என்பதால் என்னையும் அறியாமல் ஒரு பதற்றம் இருந்தது. ஏனெனில் தலைவர் கலைஞரின் பெயரை காப்பாற்ற வேண்டுமே என்பது தான். ஆனால் வாக்காளர்களாகிய உங்கள் மீது நான் நம்பிக்கை வைத்திருந்தேன். அந்த நம்பிக்கை பொய்த்து போகவில்லை. தேர்தலின் போது நாற்பதும் நமதே என்ற முழக்கத்தோடு தான் தேர்தலில் ஈடுபட்டோம் அந்த முழக்கம் வெற்றி பயணமாக அமைந்திருக்கிறது.

இந்த மதசார்பற்ற கூட்டணி என்பது கொள்கை வடிவில் உருவாக்கப்பட்ட கூட்டணி என்பதை மறந்து விடக்கூடாது, அரசியல் லாபத்துக்காகவோ தனிப்பட்ட லாபத்துக்காகவோ அமைந்த கூட்டணி அல்ல, 2 ஆண்டுகாலமாக மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து நாம் ஒருங்கிணைந்து பல போராட்டங்களை நடத்தினோம். அதன்பிறகு தோழமை உணர்வோடு நாம் ஒருங்கிணைந்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை அமைத்து தேர்தலை சந்தித்தோம்.

ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறீர்கள், ஆனால் ஆட்சிக்கு வர முடியாத படி 22 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற முடியவில்லையே என்று நம்மை விமர்சனம் செய்கிறார்கள். நம்முடைய தோழர்களிடத்திலும் அந்த சோர்வு உண்டு என்பதை நான் மறுக்கவில்லை. நீங்கள் கவலைப்படாதீர்கள். இப்போது சட்டமன்றம் கூடியிருக்கிறது. அதில் என்னென்ன நடக்கப்போகிறதோ, யாமறியேன் பராபரமே. இன்னும் ஒன்றரை ஆண்டுகாலம் தான் இந்த ஆட்சிக்கு ஆயுள் இருக்கிறது, ஆயுள் முடிந்து ஆட்சிமாற்றமா? ஆயுள் முடிவதற்குள் ஆட்சி மாற்றமா? என்று ஒரு கேள்விக்குறி தொடர்ந்து கொண்டு இதுக்கிறது. எதுவும் நடக்கலாம், எப்படியும் நடக்கலாம் ஆனால் ஒன்று மட்டும் உறுதி. விரைவில் இந்த ஆட்சி கவிழப்போகிறது என்பது உண்மை, அதை யாரும் மறுத்திட முடியாது.

நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமல்ல சட்டமன்ற இடைத்தேர்தலிலும் நாம் தான் வெற்றி பெற்று இருக்கிறோம். 22 தொகுதிகளில் 13 தொகுதிகளில் நாம் வெற்றி பெற்று இருக்கிறோம். ஆகவே நம்முடைய வெற்றி என்பது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்று வெற்றி.

அதனால் தான் இந்த வெற்றியை சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த வெற்றியால் என்ன பயன்? என்று கேட்கிறார்கள். நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒட்டுமொத்த மக்களின் வழக்கறிஞர்களாக மாறி, நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்ததை பார்த்து பிரதமரே மனம் திறந்து பாராட்டினாரே. நம் தாய்மொழியாக இருக்ககூடிய அழகு தமிழ் மொழி, இந்திய நாடாளுமன்றத்தில் ஒலித்ததே. மும்மொழி திட்டம் அறிவித்தீர்களே, உடனே நாம் கண்டிக்கவில்லையா? அதற்கு பிறகு அது வாபஸ் பெறப்பட்டது. தென்னக ரெயில்வேயில் இனி தமிழில் பேசக்கூடாது, இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டும் தான் பேச வேண்டும என்று ஒரு தாக்கீது வந்தது. அது வந்த அடுத்த வினாடி தென்னக ரெயில்வே அலுவலகத்தை முற்றுகையிட உத்தரவிட்டேன், உடனே தயாநிதி மாறன் தலைமையில் முற்றுகையிட்டார்கள், அடுத்த 5-வது நிமிடத்தில் அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது. என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்கிறீர்களே போதுமா? இன்னும் சொல்லணுமா?

தமிழ்நாட்டிலே ஒரு ஆட்சி இருக்கிறது. ஒரு முதல்-அமைச்சர் இருக்கிறார், துணை முதல்-அமைச்சர் ஒருவரும் இருக்கிறார். ஏறத்தாழ 32 அமைச்சர்கள் இருக்கிறார்கள், என்ன பிரயோஜனம், குடிக்க ஒரு குடம் தண்ணீருக்கு வக்கில்லை என்ற நிலையில் ஒரு ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து டெல்டா மாவட்டம் முழுலதும் மக்கள் கிளர்ந்து எழுந்து போராடுகிறார்கள். டெல்டா மாவட்டங்களில் 104 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்ட கிணறு அமைக்க அரசு அனுமதி கொடுக்கிறது இதனை எதிர்த்து நாடாளுமன்றத்தில் நம் உறுப்பினர்கள் குரல் எழுப்பிக்கொண்டு இருக்கிறார்கள், இன்னும் குரல் எழுப்புவார்கள், அந்த குரலுக்கு மதிப்பு இல்லையென்று சொன்னால் ஒட்டுமொத்த டெல்டா மாவட்ட மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்கிற சூழ்நிலை மத்திய, மாநில அரசுகளுக்கு வரும் என்று எச்சரிக்கிறேன்.

சென்னை-சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து மக்கள் பேராடுகிறார்கள். அந்த பணியில் ஈடுபடக்கூடாது என்று தேர்தலுக்கு முன்பு உயர்நீதிமன்றம் தடை உத்தரவு போட்டது. அதனை மீறி நாங்கள் மேல்முறையீடு செய்யப்போகிறோம் என்று இந்த அரசு உச்சநீதிமன்றத்துக்கு போயிருக்கிறது. இன்றைக்கு அ.தி.மு.க. கூட்டணியில் ராஜ்யசபா எம்.பி. பதவி வருமா? என்று தவித்துக்கொண்டு இருக்கிற ஒரு தலைவர் இருக்கிறாரே அவர் தான் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்துக்கு போனவர். ஆனால் அவர் இப்போது அதைப்பற்றி வாய்திறக்காமல் ஏன் மவுனமாக இருக்கிறார்? அதேப்போல் கூடங்குளம் அணுக்கழிவு திட்டத்தை எதிர்த்த மக்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.

தலைநகர் சென்னையில் இருந்து தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. தங்கும் விடுதியில் இருக்கிறவர்கள் எல்லாம் காலி செய்து கொண்டு இருக்கிறார்கள், ஐ.டி. கம்பெனி ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யலாம் எங்களால் தண்ணீர் கொடுக்க முடியவில்லை என்று சொல்லும் நிலை. ஆனால் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை என்று உள்ளாட்சி துறையின் அமைச்சர் சொல்கிறார். குடங்களோடு பெண்கள் சாலையில் அலைந்து கொண்டு இருக்கிறதை அமைச்சர் பார்க்கவில்லையா? ஜோலார் பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதாக சொல்கிறீர்களே என்ன காரணம்? தண்ணீர் தட்டுப்பாடு இல்லையென்றால் ஏன் தண்ணீர் கொண்டு வரணும்.?

கடந்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தின் போது, சென்னையில் உள்ள ஏரிகள் எல்லாம் வறண்டு கொண்டு இருக்கிறது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மறைந்த ஜெயலலிதா 2013-ம் ஆண்டில் முதல்-அமைச்சராக இருந்த போது கடல் நீரை குடிநீராக்கி மக்களுக்கு வழங்கக்கூடிய 4 திட்டங்களை அறிவித்தார். அதில் ஒன்று, ஏற்கனவே தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தினை விரிவாக்கம் செய்யும் திட்டமாகும். அந்த திட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் தான் அடிக்கல் நாட்டி இருக்கிறார். இதில் உலக அளவில் டெண்டர் என்று சொல்லி முறைகேடு நடந்திருக்கிறது என்று சட்டமன்றத்தில் பேசியிருக்கிறோம். ஆனால் இந்த அரசு அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.

அதேப்போல் பேரூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், ராமநாதபுரத்தில் குதிரை மொழி என்கிற இடத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், 4-வதாக தூத்துக்குடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகியவற்றையும் 2013-ல் ஜெயலலிதா அறிவித்தார் அந்த திட்டங்களெல்லாம் என்ன ஆச்சு, சட்டமன்றத்தில் இதைப்பற்றியெல்லாம் கேட்கத்தான் போகிறோம்.

இந்த ஆட்சியாளர்கள் 8 ஆண்டுகளாக எதுவுமே செய்யவில்லை. இவர்கள் கவலையெல்லாம் ஆட்சியை தக்க வைத்துக்கொள்வது எப்படி? என்பதாகவே இருந்தது. இப்போது சட்டமன்றம் கூடியிருக்கிறது. அதனால் எந்த எம்.எல்.ஏ. நம்மிடம் இருப்பார், எந்த எம்.எல்.ஏ. நம்மை விட்டு தாவுவார் என்பதை கண்காணிப்பதற்காக எம்.எல்.ஏ.க்களுக்கு ஒற்றர்களை காவலுக்கு வைத்திருக்கிறார்கள், நாங்கள் அந்த ஒற்றர்களுக்கே ஒற்றர்களை வைத்திருக்கிறோம். எடப்பாடியை இன்னும் ஆளவிட்டால் நாடு தாங்காது, நாட்டு மக்களும் பொறுக்கமாட்டார்கள். உங்களை நாட்டு மக்கள் முன் நிறுத்தி உரிய தண்டனை வாங்கித்தருவோம். இதற்கு முன்னோட்டமாகத்தான் நாடாளுமன்றதேர்தல் முடிவு வந்து உள்ளது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசும்போது, தலைவர் கலைஞர் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை மட்டுமல்ல ஜெயலலிதா மறைந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்தையும் மு.க.ஸ்டாலின் பூர்த்தி செய்து உள்ளார், அதனால் தான் அ.தி.மு.க.வில் இருந்தும் தி.மு.க.வுக்கு வருகிறார்கள் என்று குறிப்பிட்டார்.

கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரி வைத்தியலிங்கம், கடலூர் ரமேஷ், சேலம் பார்த்திபன், கள்ளக்குறிச்சி கவுதமசிகாமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் சிவசங்கரன், குன்னம் ராஜேந்திரன், துரை கி.சரவணன், சபா.ராஜேந்திரன், புகழேந்தி, தட்டாஞ்சாவடி வெங்கடேசன், உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி உள்ளிட்டோர் பேசினார்கள்.

முன்னாள் எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன் , கடலூர் நகர செயலாளர் கே.எஸ்.ராஜா, வி.ஆர். அறக்கட்டளை நிறுவனர் விஜயசுந்தரம், முன்னாள் தளபதி பேரவை மாவட்ட செயலாளர் ரமேஷ் ஸ்டாலின் பிரியன், கடலூர் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெ.மகேஷ், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ராஜசேகரன், பன்னாட்டு தி.மு.க. பொருளாளர் புகழேந்தி, நெய்வேலி தொ.மு.ச. தலைவர் ராமச்சந்திரன், பொதுச்செயலாளர் சுகுமார், பொருளாளர் குருநாதன், அலுவலக செயலாளர் பாரி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story