காரை முற்றுகையிட்ட மாணவ-மாணவிகளிடம் மடிக்கணினி வழங்கப்படும் என்று உறுதிமொழி கடிதம் எழுதிக் கொடுத்த எம்.எல்.ஏ.


காரை முற்றுகையிட்ட மாணவ-மாணவிகளிடம் மடிக்கணினி வழங்கப்படும் என்று உறுதிமொழி கடிதம் எழுதிக் கொடுத்த எம்.எல்.ஏ.
x
தினத்தந்தி 29 Jun 2019 11:00 PM GMT (Updated: 29 Jun 2019 8:45 PM GMT)

மானாமதுரை அருகே மடிக்கணினி கேட்டு காரை முற்றுகையிட்ட மாணவ-மாணவிகளிடம் மடிக்கணினி வழங்கப்படும் என்று எம்.எல்.ஏ. உறுதிமொழி கடிதம் எழுதிக் கொடுத்தார்.

மானாமதுரை,

தமிழகம் முழுவதும் 2017-18-ம் ஆண்டு கல்வி பயின்ற மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை. ஆனால் 2018-19, 2019-20-ம் கல்வி ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பாச்சேத்தி, கொம்புக்காரனேந்தல், கட்டிக்குளம் உள்ளிட்ட அரசு பள்ளிகளில் மடிக்கணினி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி நாகராஜன் எம்.எல்.ஏ. கொம்புக்காரனேந்தல் அரசு பள்ளியில் மடிக்கணினிகளை வழங்கினார்.

முற்றுகை

பின்னர் அவர் கட்டிக்குளத்தில் உள்ள அரசு பள்ளிக்கு வந்தார். அப்போது 50-க்கும் மேற்பட்ட 2017-18-ம் ஆண்டு பயின்ற மாணவர்கள் தங்களுக்கு மடிக்கணினி வழங்கி விட்டுதான், மற்றவர்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் என்று முறையிட்டு எம்.எல்.ஏ.வின் காரை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து எம்.எல்.ஏ. 2017-18-ம் ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய பின்பு தான் மற்ற மாணவர்களுக்கு வழங்கப்படும் என தனது கைப்பட உறுதிமொழிக் கடிதம் எழுதி கொடுத்தார். அதைத் தொடர்ந்து முற்றுகையை கைவிட்ட மாணவ, மாணவிகள் காருக்கு வழிவிட்டனர்.

போராட்டம்

இதேபோல திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமையாசிரியை தேவிகாராணி தலைமையில் நடைபெற்றது. விழாவில் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 354 மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கி பேசினார்.

விழாவில் மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் சிவதேவ்குமார், மாவட்ட வக்கீல் பிரிவு இணைச்செயலாளர் பிரிவு அழகுமலை, திருப்புவனம் யூனியன் முன்னாள் துணை தலைவர் புவனேந்திரன், நகர செயலாளர் நாகரத்தினம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், தே.மு.தி.க ஒன்றிய செயலாளர் காந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழா முடிந்த பின்னர் எம்.எல்.ஏ. காரில் புறப்படும் போது கடந்த 2017-18-ம் ஆண்டில் படித்த மாணவ-மாணவிகள் தங்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும் என்று கூறி காரை மறித்து போராட்டம் நடத்தினர். தொடர்ந்து எம்.எல்.ஏ. மடிக்கணினி வழங்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

போலீசார் அப்புறப்படுத்தினர்

இதேபோல் திருப்புவனம் அருகே கீழடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினியை எம்.எல்.ஏ. வழங்கினார். அங்கும் முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த திருப்புவனம் போலீசார் அங்கிருந்து மாணவர்களை அப்புறப்படுத்தினர்.

Next Story