8 வழிச்சாலை திட்டத்தை கைவிட சட்டசபையில் வலியுறுத்த வேண்டும் தி.மு.க. எம்.எல்.ஏ.விடம் விவசாயிகள் கோரிக்கை


8 வழிச்சாலை திட்டத்தை கைவிட சட்டசபையில் வலியுறுத்த வேண்டும் தி.மு.க. எம்.எல்.ஏ.விடம் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 1 July 2019 4:30 AM IST (Updated: 30 Jun 2019 10:46 PM IST)
t-max-icont-min-icon

8 வழிச்சாலை திட்டத்தை கைவிட சட்ட சபையில் வலியுறுத்த வேண்டும் என்று சேலத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.விடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

சேலம், 

சேலத்தில் இருந்து சென்னைக்கு ரூ.10 ஆயிரம் கோடியில் 8 வழிச்சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு ெசய்திருந்தது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி கடந்தாண்டு நடந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன்பிறகு விவசாயிகள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில் இத்திட்டதிற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்தநிலையில், சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று சேலம் வடக்கு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜேந்திரனை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நாடாளுமன்ற தேர்தலின்போது, உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டோம் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை கொடுத்திருந்தார். ஆனால், தேர்தலுக்கு பின் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் மக்கள், 8 வழிச்சாலை திட்டம் வேண்டாம் என தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கு மதிப்பு கொடுத்து, அரசு மேல்முறையீடு செய்ததை திரும்ப பெற வேண்டும். வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்த வேண்டும். 8 வழிச்சாலை திட்டம் அமைக்கப்பட்டால் ஏராளமான மரங்கள் வெட்டப்படும். எனவே, விவசாய நிலங்கள் வழியாக இத்திட்டத்தை செயல்படுத்தாமல், ஏற்கனவே உள்ள பாதை வழியாக அமைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து 8 வழிச்சாலை திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் நாராயணன் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக, பாதிக்கப்படும் 5 மாவட்ட விவசாயிகளும் ஒன்றிணைந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்த முடிவு செய்துள்ளோம், என்றார்.

Next Story