ஏரி, குளங்களை தூர்வார முன்வாருங்கள் பொதுமக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்
ஏரி, குளங்களை தூர்வார முன்வர வேண்டும் என்று பொதுமக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த காக்களூர் கிராமத்தில் உள்ள தாமரைகுளத்தில் மும்மாரி திருவள்ளூர் எனும் திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் குளம் தூர்வாரும் பணி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கி குளம் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் ஆய்வுக்கூட்டத்தில் மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் ஆகிய நீர்ஆதாரங்களை மாவட்ட நிர்வாகத்துடன் தன்னார்வலர்கள் இணைந்து துர்வாரி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து காக்களூரில் உள்ள தாமரைக்குளத்தை தனியார் பங்களிப்புடன் தூர்வாரும் பணி முதன்முதலாக தொடங்கப்பட்டுள்ளது.
இந்தகுளத்தை ரூ.12 லட்சம் மதிப்பில் 5.6 ஏக்கர் பரப்பளவில் தூர்வாரி நீர் சேகரிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
குளத்தின் நடுவே பருத்திப்பட்டு ஏரியில் அமைக்கப்பட்டது போல் தூர்வாரப்படும் வண்டல் மண்ணை கொண்டு மணல் திட்டுக்கள் உருவாக்கப்பட்டு பறவைகள் அமர்ந்து செல்ல ஏதுவாக அமைக்கப்பட்டு உள்ளது. குளத்தின் நீர் உள்வரத்து மற்றும் வெளியேற்றப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மழைக்காலங்களில் நீர் சேகரிக்கப்பட்டு குளத்தின் நீர்த்தேக்க கொள்ளளவு அதிகரிக்கப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மும்மாரி மழை பொழிய வேண்டும் என்ற நோக்கத்துடன் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், கண்மாய்கள் மற்றும் குளங்களை இதே வேகத்துடன் செயல்பட்டு சீர்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்ட குடிமராமத்து பணிகள் 62 ஏரிகளில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் இந்த ஆண்டு 30 ஏரிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த குடிமராமத்து பணிகள் தொடர திருவள்ளூர் மாவட்டத்திற்கு நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் மும்மாரி திருவள்ளூர் என்ற முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பும் தன்னார்வலர்கள், அரசு சாரா அமைப்புகள், நிறுவனங்கள் பதிவு செய்து கொள்வதற்கு என இணைய வழி பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
https//:mummari.in / என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேற்கண்ட முயற்சியில் ஈடுபட விரும்புபவர்கள் 9444501111 என்ற கைப்பேசிக்கு ‘மிஸ்டுகால்’ மூலம் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். ஏரி, குளங்களை தூர்வார பொதுமக்கள் முன்வர வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மண்டல துணை தாசில்தார் வெங்கடேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்டாலின், சேகர், காக்களூர் ஊராட்சி செயலாளர் முத்துக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story