6 வாய்க்கால்களில் ரூ.1¾ கோடியில் குடிமராமத்து பணி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்


6 வாய்க்கால்களில் ரூ.1¾ கோடியில் குடிமராமத்து பணி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்
x
தினத்தந்தி 2 July 2019 4:30 AM IST (Updated: 2 July 2019 2:02 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் ரூ.1¾ கோடி மதிப்பில் 6 வாய்க்கால்களில் குடிமராமத்து பணி நடக்கிறது என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார்.

கரூர்,

கரூர் மாவட்டம் பெரிய ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள பள்ளபாளையம் வாய்க்கால் தூர்வாரி குடிமராமத்து செய்யும் பணியினை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கரூர் மாவட்டத்தில், அமராவதி வடிநிலக் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ள பாளையம் வாய்க்கால், கோயம்பள்ளி-சோமூர் வாய்க்கால், திருமாநிலையூர் வாய்க்கால், மாயனூர் மணவாசி வாய்க்கால், சின்னதாராபுரம் வாய்க்கால் மற்றும் நஞ்சைகாளக்குறிச்சி வாய்க்கால் ஆகிய 6 வாய்க்கால்கள் ரூ.1 கோடியே 74 லட்சம் மதிப்பில் முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்த்தின் கீழ் தூர்வாரப்பட உள்ளது.

இதில் பள்ளபாளையம் வாய்க்கால் ரூ.35 லட்சம் மதிப்பில் தூர்வாரி குடிமராமத்து செய்யும் பணி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால் பள்ளபாளையம் அணைக்கட்டு முதல் 28,140 மீட்டர் நீளம் உள்ளது.

வெள்ளத்தடுப்பு சுவர்கள்

இந்த வாய்கால் மூலம் 20,584 விவசாய பாசனதாரர்கள் 1,467 எக்டேர் நிலம் பாசன வசதி பெறுகின்றனர். இதில் உள்ள செடி,கொடிகள் மற்றும் மண்படிவுகளை அகற்றி தேவையான இடத்தில் வெள்ளத்தடுப்பு சுவர்கள் கட்டப்பட உள்ளது.

இப்பணிகள் அமராவதி பழைய பாசன பள்ள பாளையம் வாய்க்கால் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கம் மூலம் மேற்கொள்ளப்ாட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் அமராவதி வடி நிலக்கோட்ட செயற்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் ராஜகோபால், பள்ளபாளையம் வாய்க்கால் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தலைவர் பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story