மனைவி, குழந்தைகளை தவிக்கவிட்டு, திருநங்கையை திருமணம் செய்த விழுப்புரம் வாலிபர் - 3 ஆண்டுகளுக்கு பிறகு ‘டிக்டாக்’ மூலம் சிக்கினார்


மனைவி, குழந்தைகளை தவிக்கவிட்டு, திருநங்கையை திருமணம் செய்த விழுப்புரம் வாலிபர் - 3 ஆண்டுகளுக்கு பிறகு ‘டிக்டாக்’ மூலம் சிக்கினார்
x
தினத்தந்தி 3 July 2019 5:30 AM IST (Updated: 2 July 2019 11:02 PM IST)
t-max-icont-min-icon

மனைவி, குழந்தைகளை தவிக்கவிட்டு திருநங்கையை திருமணம் செய்த விழுப்புரம் வாலிபர் 3 ஆண்டுகளுக்கு பிறகு ‘டிக்டாக்’ செயலி மூலம் சிக்கினார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

விழுப்புரம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பூந்தமல்லி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 26). இவருக்கும் விழுப்புரம் வழுதரெட்டியைச் சேர்ந்த ஜெயப்பிரதா(25) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சுரேஷ் தனது மாமனார் ஊரான விழுப்புரத்தில் தங்கி, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு சுரேஷ் வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சுரேசை பல்வேறு இடங்களில் தேடினர். இருப்பினும் அவரை பற்றி எந்த தகவலும் இல்லை. இதையடுத்து ஜெயப்பிரதா மாயமான தனது கணவரை கண்டுபிடித்து தரக்கோரி விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சுரேசை தேடி வந்தனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுரேஷ் போன்ற நபர் ஒருவர், டிக்டாக் செயலியில் ஒரு திருநங்கையுடன் ஜோடியாக வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்ததை ஜெயப்பிரதாவின் உறவினர் ஒருவர் பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் அவர் அந்த வீடியோவை ஜெயப்பிரதாவிடம் காண்பித்து, அவர் சுரேஷ் என்பதை உறுதி செய்தார். அதன்பிறகு ஜெயப்பிரதா தனது உறவினருடன் சுரேஷ், திருநங்கையுடன் டிக்டாக்கில் வெளியிட்ட வீடியோ பதிவை விழுப்புரம் தாலுகா போலீஸ் அதிகாரிகளிடம் காண்பித்தார். இதையடுத்து போலீசார் திருநங்கை குறித்து விசாரணை நடத்தியதில், அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் என்பதும், அவரை சுரேஷ் திருமணம் செய்து கொண்டு 3 ஆண்டுகளாக வாழ்ந்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து தாலுகா போலீசார் ஓசூருக்கு விரைந்து சென்று சுரேசை மீட்டு விழுப்புரம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி, குழந்தைகளை தவிக்கவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்ற சுரேஷ் ஓசூரில் தங்கி, அங்குள்ள தனியார் டிராக்டர் நிறுவனத்தில் பணிபுரிந்ததும், அப்போது அங்குள்ள ஒரு திருநங்கையுடன் பழக்கம் ஏற்பட்டு, அவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்ததும், அவர்கள் இருவரும் ஒரு பாடலுக்கு வீடியோ பதிவு செய்து டிக்டாக் செயலியில் பதிவிட்டபோது சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து சுரேசுக்கு போலீசார் அறிவுரைகள் கூறி மனைவி, குழந்தைகளுடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story