மில் உரிமையாளரின் வங்கி கணக்கில் ரூ.6¼ கோடி மோசடி - மேலாளர் உள்பட 2 பேர் கைது
மில் உரிமையாளரின் வங்கி கணக்கில் ரூ.6¼ கோடி மோசடி நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக மில் மேலாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து கோவை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:-
கோவை,
கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டியில் லட்சுமி ஸ்பின்னிங்மில் உள்ளது. இதன் உரிமையாளர் நடராஜன். இவரது மில்லில் கரூர் அரவக்குறிச்சி நல்லிபாளையத்தை சேர்ந்த கண்ணன் (வயது 41) என்பவர் மேலாளராகவும், கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் குமார் நகரை சேர்ந்த வினோத்குமார் (36) என்பவர் கணக்காளராகவும் பணியாற்றி வந்தனர்.
மில் உரிமையாளர் நடராஜன், மில் அபிவிருத்திக்காக கோவை திருச்சி ரோட்டில் உள்ள தனியார் வங்கியில் ரூ.36 கோடி கடன் வாங்கி இருந்தார். இதற்காக மாதந்தோறும் ரூ.53 லட்சம் தவணைதொகை செலுத்தி வந்தார். தவணை தொகையை ஒழுங்காக செலுத்தி வந்ததால், நடராஜன் மீண்டும் கடன் கேட்டு வங்கியை அணுகினார். அப்போதுதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கடன் தொகையை சரியாக வங்கியில் செலுத்தவில்லை என்று வங்கி அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து தனது கணக்கை சரிபார்க்குமாறு வங்கி அதிகாரிகளை நடராஜன் கேட்டுக்கொண்டார். அப்போது கடந்த 5 ஆண்டுகளாக அவர் செலுத்திய தவணை தொகை ரூ.53 லட்சத்தை, வரவு வைக்காமல் ரூ.21 லட்சத்து 40 ஆயிரத்து 921-ஐ மட்டும் வரவு வைத்துவிட்டு மில் கணக்காளர் வினோத்குமாரின் சொந்த கணக்கிற்கு மீதி தொகையை பரிமாற்றம் செய்து மோசடி நடைபெற்றுள்ளது. இவ்வாறு ரூ.6 கோடியே 20 லட்சம் வரை மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்தது.
இந்த மோசடிக்கு மில் மேலாளர் கண்ணன், கணக்காளர் மற்றும் வங்கி அதிகாரிகள் உடந்தையாக இருந்தாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நடராஜன் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் யமுனாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் அருண் ஆகியோர் மோசடி, ஆவண மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையை தொடர்ந்து மேலாளர் கண்ணன், கணக்காளர் வினோத்குமார் ஆகியோர் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக வங்கி உதவி பொதுமேலாளர் சிவசுப்பிரமணியம், உதவி மேலாளர் சிவச்சந்திரன் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.
மேலும் இந்த மோசடி குறித்து வங்கியின் உயர் அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள். தனியார் மில்லில் ரூ.6 கோடியே 20 லட்சம் மோசடி சம்பவத்துக்கு வங்கி அதிகாரிகளே உதவியது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story