நெல்லையில் ‘தர்மபிரபு’ படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டரை இந்து முன்னணியினர் முற்றுகை


நெல்லையில் ‘தர்மபிரபு’ படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டரை இந்து முன்னணியினர் முற்றுகை
x
தினத்தந்தி 2 July 2019 10:15 PM GMT (Updated: 2 July 2019 7:10 PM GMT)

நெல்லையில் ‘தர்மபிரபு’ படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டரை இந்து முன்னணியினர் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

நெல்லை,

நடிகர் யோகிபாபு நடித்த ‘தர்மபிரபு’ என்ற திரைப்படம் சமீபத்தில் மாநிலம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த படத்தில் இந்து கடவுள்களையும், இந்துக்களையும், மத கோட்பாடுகளையும் விமர்சித்து இருப்பதாக இந்து முன்னணி சார்பில் புகார் கூறப்பட்டது. இந்த படத்தை திரையிடுவதற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு தியேட்டரில் தர்மபிரபு படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த தியேட்டர் முன்பு நெல்லை மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்து முன்னணியின் மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் அந்த அமைப்பினர் நெல்லை தியேட்டர் முன்பு நேற்று மாலை முற்றுகை போராட்டம் நடத்தினர். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் குற்றாலநாதன், நெல்லை கோட்ட தலைவர் தங்கமனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது வி.பி.ஜெயக்குமார் கூறுகையில், “சமீபத்தில் வெளிவந்த சில படங்களில் இந்து கடவுள்களை விமர்சனம் செய்வது போல் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு தணிக்கை குழுவினர் எப்படி அனுமதி கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. தர்மபிரபு திரைப்படத்தில் வரும் காட்சிகள் இந்துக்களின் மனதை புண்படுத்துவது போல் அமைந்துள்ளது. இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும்“ என்றார்.

இந்த போராட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் சங்கர், சுடலை, இசக்கிமுத்து, ராமச்சந்திரன், இசக்கிராஜா, ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story