பட்டா மாற்றம் செய்ய ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது


பட்டா மாற்றம் செய்ய ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
x
தினத்தந்தி 3 July 2019 3:45 AM IST (Updated: 3 July 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டை அருகே பட்டா மாற்றம் செய்ய ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

பட்டுக்கோட்டை,

பட்டுக்கோட்டை தாலுகா இடையாத்தி தெற்குகிராம நிர்வாக அலுவலர் பாஸ்கர்(வயது37). இவர் தஞ்சை மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க துணை செயலாளராக உள்ளார். இடையாத்தி வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன்(52). இவர் பட்டா மாற்றம் செய்ய கடந்த மாதம் ஆன்லைனில் பதிவு செய்துவிட்டு கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கரை சந்தித்து பட்டாமாற்றம் செய்து கொடுக்குமாறு கேட்டார். அப்போது பாஸ்கர் தனக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் பட்டா மாற்றம் செய்து கொடுக்கப்படும் என்று கூறினார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத நடராஜன் இது குறித்து தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.2 ஆயிரத்தை நடராஜனிடம் கொடுத்து அதை கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கரிடம் கொடுக்குமாறு கூறினர்.

இதைத்தொடர்ந்து நடராஜன் கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கரை செல்போனில் தொடர்பு கொண்டு எங்கு வந்து பணத்தை கொடுக்க வேண்டும் என கேட்டார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கர், தான் பட்டுக்கோட்டை கோர்ட்டு எதிரில் உள்ள டீக்கடை அருகே நிற்பதாகவும் அங்கு வந்து பணத்தை கொடுக்குமாறு கூறினார். இந்த தகவலை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரிவித்த நடராஜன் ரசாயன பவுடர் தடவிய ரூ.2 ஆயிரத்துடன் பட்டுக்கோட்டை கோர்ட்டு எதிரே உள்ள டீக்கடைக்கு சென்றார். அங்கு இருந்த கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கரிடம் ரூ. 2 ஆயிரத்தை நடராஜன் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த தஞ்சை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன், இன்ஸ்பெக்டர்கள் பத்மாவதி, வெங்கடேசன் ஆகியோர் விரைந்து சென்று கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கரை பணத்துடன் பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கும்பகோணம் குற்றவியல் தலைமை நீதிபதி முன்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பாஸ்கரை காவலில் வைக்க நீதிபதி மாதவராமானுஜம் உத்தரவிட்டார்.

Next Story