விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 9½ பவுன் நகைகள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 9½ பவுன் நகைகள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 3 July 2019 4:30 AM IST (Updated: 3 July 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

புகளூரில், விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 9½ பவுன் மற்றும் ரூ.10 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நொய்யல்,

கரூர் மாவட்டம், புகளூர் தாலுகாவுக்கு உட்பட்ட புகளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள வள்ளுவர் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 30). விவசாயி. இவரது மனைவி ஹேமலதாவுக்கு உடல்நிலை சரியில்லாததால், புன்னம் சத்திரம் ஆண்டவர் நகரிலுள்ள அவரது பெற்றோர் வீட்டில் தங்கி சிகிச்சை எடுத்து வருகிறார்.

தனது மனைவியை பார்த்துவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு அழைத்து வருவதற்காக நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை ராஜ்குமார் பூட்டி விட்டு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர் ராஜ்குமார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் பீரோவை உடைத்து அதிலிருந்த தங்க காப்பு, சங்கிலி, தோடு உள்ளிட்ட 9½ பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரத்தை திருடிக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இந்தநிலையில் நேற்று காலை ராஜ்குமார் வீடு திரும்பினார். அப்போது கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த நகை-பணம் திருட்டு போனது தெரிய வந்தது. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் ராஜ்குமாா புகார் கொடுத்தார்.

அதன்பேரில், சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, திருடர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இந்த திருட்டு குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணம் திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த துணிகர திருட்டு சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story