கூடலூரில், காட்டுயானையிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க தூக்கத்தை இழந்து போராடும் விவசாயிகள்


கூடலூரில், காட்டுயானையிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க தூக்கத்தை இழந்து போராடும் விவசாயிகள்
x
தினத்தந்தி 4 July 2019 4:15 AM IST (Updated: 4 July 2019 12:01 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் காட்டுயானையிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க தூக்கத்தை இழந்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்று சேதப்படுத்துவது, வீடுகளை இடித்து முற்றுகையிடுவது என காட்டுயானைகள் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கூடலூர் நகராட்சி மற்றும் முதுமலை புலிகள் காப்பக எல்லையோரம் உள்ள தொரப்பள்ளி முதல் போஸ்பாரா வரை ஏராளமான குக்கிராமங்கள் உள்ளன. இங்குள்ள விவசாயிகள் தென்னை, பாக்கு, நேந்திரன் வாழை, இஞ்சி மற்றும் காய்கறிகளை பயிரிட்டுள்ளனர்.

இந்த நிலையில் முதுமலை வனப்பகுதியில் உள்ள காட்டுயானைகள் தினமும் இரவில் வெளியேறி மேற்கண்ட கிராமங்களுக்குள் புகுந்து தென்னை, பாக்கு, வாழைகளை தின்று சேதப்படுத்தி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக கோடை காலத்தில் காட்டுயானைகளின் வருகை அதிகமாகி உள்ளது. இதனால் முதுமலை எல்லையோரம் உள்ள அகழியை ஆழப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் காட்டுயானைகளின் வருகை தொடர்வதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக தொரப்பள்ளி, குனில், வடவயல் உள்ளிட்ட கிராமங்களில் பயிரிட்டு இருந்த வாழை, பாக்கு மரங்களை காட்டுயானை ஒன்று தினமும் நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து தின்று சேதப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக முதுமலை எல்லையோர விவசாயிகள், பொதுமக்கள் தூக்கத்தை இழந்து உள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த காட்டுயானை ஊருக்குள் புகுந்து தென்னை மரங்களை வேருடன் சாய்த்து போட்டு தின்றது. இதை அறிந்த விவசாயிகள் தூக்கத்தை இழந்து காட்டுயானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இவ்வாறு எவ்வளவு நாட்கள் தூங்காமல் இருந்து காட்டுயானையிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பது என்று விவசாயிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதுகுறித்து மேற்கண்ட கிராமங்களின் விவசாயிகள் கூறியதாவது:-

காட்டுயானையை விரட்டுவதற்காக தினமும் நள்ளிரவு முதல் விடியற்காலை வரை தூக்கத்தை இழந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கூடலூர் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இந்த நிலையில் காட்டு யானை மின்கம்பிகள் மீது தென்னை மரங்களை சாய்த்து போடுகிறது. மேலும் எங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் காட்டுயானை வருகைக்கு முடிவு கிடைக்கவில்லை. இனிமேல் யாரிடம் முறையிடுவது என தெரியவில்லை. தூக்கத்தை இழந்தாலும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கவலையுடன் கூறினர்.

Next Story