பட்டப்பகலில் துணிகரம்: காகித ஆலை பொறியாளர் வீட்டில் 13 பவுன் நகை-பணம் திருட்டு


பட்டப்பகலில் துணிகரம்: காகித ஆலை பொறியாளர் வீட்டில் 13 பவுன் நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 4 July 2019 4:30 AM IST (Updated: 4 July 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

காகித ஆலை பொறி யாளர் வீட்டின் பூட்டை உடைத்து பட்டப்பகலில் 13 பவுன் நகை, பணத்தை திருடி காரில் தப்பி சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நொய்யல்,

கரூர் மாவட்டம், நொய்யல் பாலத்துறை அருகே உள்ள கூலக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 44). இவர் புகளூர் காகித ஆலையில் பொறி யாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லதா (40). இவர் புகளூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டனர்.

இந்நிலையில் ராஜேந்திரன் பணிமுடிந்து மதியம் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டிற்கு வெளியே கார் நின்று கொண்டிருந்தது. ஒருவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். ராஜேந்திரனை பார்த்ததும், வீட்டிற்குள் இருந்த மர்மநபர் சுற்றுச்சுவரை குதித்து வந்து காரில் ஏறி 2 பேரும் தப்பி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. பின்னர் வீட்டின் உள்ளே சென்ற பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 13 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை காரில் தப்பி சென்றவர்கள் திருடியது தெரியவந்தது.

இதுகுறித்து வேலாயுதம் பாளையம் போலீஸ் நிலையத்தில் ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி லதா ஆகியார் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை-பணத்தை திருடி கொண்டு காரில் தப்பி சென்ற 2 மர்மநபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story