பெங்களூருவில் திருட்டு, கொள்ளை வழக்குகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 10 பேர் கைது


பெங்களூருவில் திருட்டு, கொள்ளை வழக்குகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 10 பேர் கைது
x
தினத்தந்தி 4 July 2019 1:02 AM IST (Updated: 4 July 2019 1:02 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் திருட்டு, கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1.68 கோடி நகைகள், வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு தென்கிழக்கு மண்டல போலீசார், நகரில் திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு இருந்த கும்பலை கைது செய்து, அவர்களிடம் இருந்து நகைகள், வாகனங்களை மீட்டு இருந்தனர். அவற்றை, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காலையில் நடைபெற்றது. இதில், போலீஸ் கமிஷனர் அலோக்குமார் கலந்து கொண்டு மீட்கப்பட்ட நகைகள், வாகனங்களை பார்வையிட்டார்.

பின்னர் அந்த நகைகள், வாகனங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் போலீஸ் கமிஷனர் அலோக்குமார் வழங்கினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அலோக்குமார் கூறியதாவது:-

பெங்களூரு தென்கிழக்கு மண்டலத்தில் உள்ள பொம்மனஹள்ளி, எலெக்ட்ரானிக் சிட்டி, மடிவாளா, ஆடுகோடி உள்ளிட்ட போலீசார் நகரில், திருட்டு மற்றும் கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக ஒட்டு மொத்தமாக 10 பேரை கைது செய்தனர். கைதானவர்களில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அந்த 3 பேரும், கவனத்தை திசை திருப்பி கைவரிசை காட்டுதல் வழக்குகளில் தொடர்புடையவர்கள். அவர்களை எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார் கைது செய்துள்ளனர். கைதானவர்கள் தமிழ்நாடு வேலூர் மாவட்டம் ஜோலார் பேட்டை அருகே அசோக் நகரை சேர்ந்த சபரி(வயது 38), பாலாஜி(49), சுபாஷ்(30) ஆகியோர் ஆவர்.

இவர்கள் 3 பேரும் எலெக்ட்ரானிக் சிட்டி, உளிமாவு பகுதிகளில் அரசு பஸ்களில் பயணம் செய்வார்கள். அந்த சந்தர்ப்பத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தியும், பயணிகளின் கவனத்தை திசை திருப்பியும், அவர்களது பைகளில் இருக்கும் நகைகள், பணத்தை அபேஸ் செய்வதை தொழிலாக வைத்திருந்தனர். இவர்கள் 3 பேரிடம் இருந்தும் 800 கிராம் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவை மீட்கப்பட்டுள்ளது.

இதுபோன்று, கைதான மற்ற 7 பேரும் கொடுத்த தகவலின் பேரில் 15 நான்கு சக்கர வாகனங்கள், 49 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. கைதான 10 பேரிடம் இருந்தும் மீட்கப்பட்ட நகைகள், வாகனங்களின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 68 லட்சம் ஆகும். இதன்மூலம் கொள்ளை, கவனத்தை திசை திருப்பி கைவரிசை காட்டுதல், திருட்டு உள்பட 59 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு இருக்கிறது.

இவற்றில் பொம்மனஹள்ளி போலீசார் 13 வழக்குகளிலும், மடிவாளா போலீசார் 14 வழக்குகளிலும், ஆடுகோடி போலீசார் 13 வழக்குகளிலும், பரப்பனஅக்ரஹாரா போலீசார் 9 வழக்குகளிலும், எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார் 10 வழக்குகளிலும் தீர்வு கண்டுள்ளனர். குற்றங்களில் ஈடுபட்ட கும்பலை திறமையாக செயல்பட்டு பிடித்த போலீசாருக்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கிழக்கு மண்டல சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் முருகன், தென்கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் இஷா பண்ட் உடன் இருந்தார்கள்.

Next Story