கவர்னர் கிரண்பெடியை கண்டித்து அ.தி.மு.க. இன்று போராட்டம்; அன்பழகன் எம்.எல்.ஏ. தகவல்


கவர்னர் கிரண்பெடியை கண்டித்து அ.தி.மு.க. இன்று போராட்டம்; அன்பழகன் எம்.எல்.ஏ. தகவல்
x
தினத்தந்தி 4 July 2019 4:45 AM IST (Updated: 4 July 2019 2:48 AM IST)
t-max-icont-min-icon

கவர்னர் கிரண்பெடியை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று போராட்டம் நடக்கிறது.

புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மலிவு விளம்பர விரும்பியான புதுவை கவர்னர் கிரண்பெடி எப்போதும் எதிர்மறையான கருத்துகளை கூறி தான் விளம்பர பிரியம் உடைய நடிகை என்று காண்பிப்பதில் குறியாக இருப்பார். அந்த வகையில் தற்போதும் தனக்கு சம்பந்தமே இல்லாத தமிழக குடிநீர் பிரச்சினையில் தமிழக ஆட்சியாளர்களை வரம்புமீறி விமர்சித்ததோடு மட்டுமல்லாமல் தமிழக மக்களை கோழைத்தனமானவர்கள், சுயநலமிக்கவர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையிலும், தமிழக மக்களின் எண்ணத்தைத்தான் சொன்னேன், இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று தனது திமிர் பிடித்த ஆணவ கருத்தை மீண்டும் அவர் பதிவிட்டுள்ளார்.

டெல்லியில் மக்களால் துரத்தி அடிக்கப்பட்டவர் தமிழக மக்களைப்பற்றி பேசுவது ஏன்? நீங்கள் எப்போது புதுவை மாநிலத்தை விட்டு போவீர்கள்? என்பதுதான் மக்களின் எண்ணமாக உள்ளது.

அந்த எண்ணத்தை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். நீங்கள் தானாக போய்விட வேண்டும். இவ்வளவுக்கு பின்னரும் திருந்துவதாக இல்லை.

எனவே கவர்னர் கிரண்பெடியின் ஆணவ பதிவினை கண்டித்தும், அவரை மத்திய அரசு திரும்பப ்பெறக்கோரியும் இன்று (வியாழக்கிழமை) கவர்னர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இந்த ஆர்ப்பாட்டம் முற்றுகை போராட்டமாகவும் மாறலாம். இதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு கவர்னரே முழு பொறுப்பு ஏற்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story