ரத்னகிரியில் கனமழை ; அணை உடைந்து 23 பேர் அடித்து செல்லப்பட்டனர் - 11 பேரின் உடல்கள் மீட்பு
ரத்னகிரியில் கனமழை காரணமாக அணை உடைந்து 23 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதில் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
மும்பை,
மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பெய்து வருகிறது. 5 நாட்களாக விடாமல் கொட்டி தீர்த்த கனமழை மாநில தலைநகர் மும்பையை புரட்டி போட்டது. கனமழை காரணமாக நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.
ரத்னகிரி மாவட்டத்தின் சிப்லுன் தாலுகாவில் திவாரே என்ற அணை இருக்கிறது.
இந்த அணையில் தேக்கப்படும் தண்ணீர் குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. திவாரே அணை அடிவார பகுதியில் அக்லே, ரிக்டோலி, ஒவாலி, கல்வனே, நந்திவாசே உள்பட 7 கிராமங்கள் உள்ளன.
தீவிரமடைந்து பெய்து வரும் பருவமழை காரணமாக திவாரே அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த சில மாதங்களாக அணையில் நீர் கசிவு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், அணையில் தண்ணீர் கசிவு ஏற்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெரிய விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அடுத்த சில நிமிடங்களில் திடீரென அணையின் ஒரு பகுதி உடைந்தது. இதனால் அணையில் இருந்து அதிக அளவு நீர் வெளியேறியதால், 7 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. அந்த கிராமங்களை சேர்ந்த 12 வீடுகளை வெள்ளம் அடித்து சென்றது. இதை பார்த்து மற்றவர்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.
இந்த துயர சம்பவத்தில் 23 பேர் சிக்கி கொண்டனர். அவர்களை வெள்ளம் அடித்து சென்றது. தகவல் அறிந்த பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனாலும் இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று பகல் முழுவதும் மீட்பு பணி நடந்தது. இதில் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மாயமான மற்றவர்கள் உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த துயர சம்பவத்தில் மீட்கப்பட்டவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
அப்பாவி கிராம மக்களை பலி வாங்கிய இந்த அணை கட்டப்பட்டு வெறும் 14 ஆண்டுகளே ஆகிறது. அணையில் நீர் கசிவு ஏற்பட்டதை அடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதமே மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்ததாகவும், ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் தங்களுக்கு இந்த பெருந்துயரம் நேர்ந்து விட்டதாகவும் கிராம மக்கள் கண்ணீர் மல்க குற்றம்சாட்டினர்.
இதற்கிடையே அணை உடைப்பு சம்பவம் குறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். பலியான குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்-மந்திரி அறிவித்தார்.
மராட்டியத்தில் இந்த ஆண்டு பருவமழைக்கு கொத்து, கொத்தாக உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த 29-ந் தேதி புனேயில் அடுக்குமாடி குடியிருப்பு சுற்றுச்சுவர் இடிந்து 15 பேர், நேற்றுமுன்தினம் அதிகாலை மும்பை மலாடில் மலையடிவாரத்தில் தடுப்பு சுவர் இடிந்து 24 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story