மதுரவாயலில் அடுத்தடுத்து 3 கம்பெனிகளில் தீ விபத்து
மதுரவாயலில், அடுத்தடுத்து 3 கம்பெனிகளில் தீ விபத்து ஏற்பட்டது.
பூந்தமல்லி,
மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தெர்மாகோல் தயாரிக்கும் கம்பெனி இயங்கி வருகிறது. நேற்று மதியம் அந்த வழியாக சென்ற லாரி, மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் உரசியது. அதில் ஏற்பட்ட தீப்பொறிகள் பறந்து அருகில் உள்ள தெர்மாகோல் கம்பெனியில் விழுந்தது.
இதில் தெர்மாகோல்கள் தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென கம்பெனி முழுவதும் பரவியது. இதனால் ஊழியர்கள் அலறி அடித்து வெளியே ஓடிவந்தனர். தெர்மாகோல்கள் என்பதால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அம்பத்தூர், மதுரவாயல் உள்ளிட்ட பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் அதற்குள் அருகில் இருந்த வெள்ளை சிமெண்டு தயாரிக்கும் கம்பெனி மற்றும் ரசாயன கம்பெனிக்கும் தீ பரவியது. அடுத்தடுத்து 3 கம்பெனிகளில் தீப்பிடித்து எரிந்ததால், அந்த பகுதி முழுவதும் கரும்புகை மூட்டமாக காணப்பட்டது. விண்ணை நோக்கி பல அடி உயரத்துக்கு கரும்புகைகள் எழுந்தது.
தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறினர். கூடுதலாக கோயம்பேட்டில் இருந்து ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 4 மணிநேர போராட்டத்துக்கு பிறகு 3 கம்பெனிகளில் எரிந்த தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளித்ததால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் மற்றும் எதிரே உள்ள தனியார் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அந்த பள்ளியில் படிக்கும் தங்களது பிள்ளைகளை பெற்றோர்கள் அவசர அவசரமாக வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
இதுபற்றி மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.